இரா.சும‌தி - மாற்றுத்திறனாளி சமூக கவிதை எழுத்தாளர் - enabled.in

இரா.சும‌தி – மாற்றுத்திறனாளி சமூக கவிதை எழுத்தாளர்

இரா.சும‌தி - மாற்றுத்திறனாளி சமூக கவிதை எழுத்தாளர்சிறுவ‌ய‌திலிருந்தே நாட்குறிப்பு எழுதிய‌ அனுப‌வ‌முடைய‌வ‌ராக‌ இருந்த‌தால் த‌ன‌து எழுத்தின் மூல‌ம் ந‌வீன‌ வார்த்தைக‌ளை அறிமுக‌ப்ப‌டுத்திக் கொண்ட‌வ‌ருக்கு தான் ச‌ந்திக்க‌ நேர்ந்த‌ நிக‌ழ்வுக‌ளை காலத்தின் ப‌திவுக‌ளாய் க‌விதையாய் உருவாக்குவ‌து எளிதான‌து.

இளம்பிள்ளைவாத‌ பாதிப்பால் ஊன‌ம‌டைந்த‌ இவர் ம‌ன‌வ‌லிக‌ளிலிருந்தும் மீண்டு ச‌மூக‌ம் குறித்து சிந்திக்க‌, ஆன்மீக‌ அனுப‌வ‌ங்க‌ளை ப‌கிர்ந்து கொள்ளும் நோக்கில் இவ‌ரின் க‌வியாற்ற‌ல் வெளிப்ப‌டுகிற‌து. திறமைகளை சமூகத்தில் புகுத்தும் திறமை உடையவள் இவள்.

சமூக கவிதை :

பிறந்தபோது ஆணாக இல்லையே என்று,
பள்ளியில் முதன்மையாக ஆசைப்பட்டு,
காதலில் வெற்றிபெற நினைத்து,
வேலைக்கு அரசை எதிர்பார்த்து,
மணவாழ்க்கையில் இனிமையாக வாழ
மக்கட்செல்வத்தில் மேன்மையுற சிந்தித்து,
கடவுளை வேண்டி……..
இன்று பெற்ற பலன்….
ஏமாற்றம் மட்டுமே!

*****************

ஆண்பாலிலும் அகப்படவில்லை
பெண்பாலிலும் பொருத்தமில்லை
அரவாணி என ஆகிவிட்டதால்
அரவணைக்கக் கூட யாருமில்லை

விலங்கு, பறவை
தாவரம் மனிதரென‌
அனைத்தும் அடையாளப்
பெயர் பெற்று அடைகின்றது கௌரவமே!
நாங்கள் மட்டும்
அடையாளம் காணாத‌
ஆச்சர்யக் குறியானோம்

அவலமே கண்டு கண்டு
அவனியிலே நொந்துவிட்டோம்
மனிதனையே மதிக்காத சமூகம்
மனிதனாகவே எண் ணாதவரையா மதிக்கும்?

குரோமோசோமின் குறும்பதுவால்
குழப்பமே வாழ்வானது
குனியக் குட்டும் சமுதாயத்தில்
மனமும் கூட தாழ்வானது

விதியை மீறிய விளையாட்டை
இயற்கை எப்படி ஈடுசெய்யும்?
விளக்க முடியா பதிலுக்கு
வினாக்குறியே விடையாகும்.

*****************

தன்னம்பிக்கை
============
தன்மேல் தனக்கிருக்கும்
ஆளுமையின் உச்சம்
தன்னம்பிக்கை!
தன்மானம் பிழைத்திடவே
தக்கவைக்கும் மிச்சம்
தன்னம்பிக்கை!
எல்லாமே தொலைத்தபின்னும்
எஞ்சியிருக்கும் சௌபாக்கியம்
தன்னம்பிக்கை!
ஜீவனே போனபின்னும்
உயிர்த்தெழும் வைராக்கியம்
தன்னம்பிக்கை!
அனுதாப பார்வைகளை
அறுத்தெறியும் கூர்வாள்
தன்னம்பிக்கை!
அனைத்துமிங்கு சாத்தியமே என
அறிவித்திடும் சுய அறிவால்….
தன்னம்பிக்கை!

Leave a comment

Share Your Thoughts...