உள்ளத்தில் நல்ல உள்ளம்-யார் இவர்? - enabled.in

உள்ளத்தில் நல்ல உள்ளம்-யார் இவர்?

உள்ளத்தில் நல்ல உள்ளம்...! யார் இவர்...?!

நம் வாழ்க்கையில் பல வேறுபட்ட குணமுள்ள மனிதர்கள் நம்மை கடந்து சென்று இருப்பார்கள். அதில் ஒரு சிலர் நம் மனதை அதிகமாக கவர்ந்துவிடுவார்கள். பதிவுலகம் வந்தபின் எனக்கு தெரிந்தவர்கள் வட்டம் விரிந்துகொண்டே செல்கிறது…அதிலும் முக்கியமாக நெல்லை பதிவர்கள் சந்திப்பிற்கு பிறகு, என் அலைவரிசையோடு ஒன்றி போனவர்களை நான் தொடர்ந்து சந்தித்து வருகிறேன் என்பது மிக ஆச்சரியம்.

எங்கள் தொண்டு நிறுவனத்தின் மூலம் மாற்று திறனாளிகளுக்கு உதவி செய்வதற்காக சில முயற்சிகள் மேற்கொண்டபோது, சேவை உள்ளம் நிறைந்த மிகச் சிறந்த ஒருவருடன் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. உடலளவில் ஒரு குறை இல்லை என்றாலும் மனதில் பல குறைகளை வைத்துகொண்டு வலம் வருகிறோம். ஆனால் நம் போன்றோருக்கு மத்தியில் தான் அற்புதமான, சில நல்ல உள்ளங்களும் வாழ்ந்துவருகின்றன.

உடலில் குறை இருந்தும் தன்னை போன்ற குறைபாடு உள்ளவர்களுக்கு உதவவேண்டும் என்கிற எண்ணம் இருக்கிற மனிதர்களை காண்பது அபூர்வம். அப்படி கால் ஊனமுற்ற ஒருவர் நவீன காலிபர் ஷூ ஒன்றை பிற மாற்று திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறார் என்பதை கேள்விப்படும்போது என்னால் பாராட்டாமல் இருக்க இயலவில்லை. அச்செய்தியை நண்பர்கள் உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்.

அது என்ன காலிபர் ஷூ ?

கால் ஊனமுற்றவர்கள் அதிலும் போலியோவால் பாதிக்க பட்டவர்கள் ‘காலிபர் ஷூ’ என்று அழைக்கப்படும் செயற்கை காலை அணிந்து இருப்பார்கள். ஆனால் அது சுகம் அல்ல வலி என்பதை நாம் அறிந்திருக்க மாட்டோம்.

சொல்லமுடியாத நரக வேதனை அது. சுமார் ஆறு கிலோ எடை கொண்ட அந்த செயற்கை கால் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும், தொடையிலும், முட்டியிலும் முட்டி மோதி உயிரை உறிஞ்சி எடுக்கும் அளவிற்கு வலி கொடுக்குமாம். தவிரவும் சில நேரம் உடைந்து போய், அடுத்த அடி வைக்க முடியாத அளவிற்கு முடங்கிப் போகச் செய்யும். காலை மடக்கி உட்கார இயலாது, இரு சக்கர வாகனம் ஓட்ட இயலாது. அடிக்கடி காலில் ஏற்படும் காயத்தினால், வலி, மருத்துவம் என்று தொடரும் சிரமங்கள் சொல்லி முடியாது…ஏற்கனவே கால் ஊனமுற்ற வலியோடு இந்த வலியையும் சுமந்துகொண்டுதான் பல ஆயிரக்கணக்கான மாற்று திறனாளிகள் வாழ்ந்து வருகின்றனர்.

நவீன செயற்கை கால்

டாக்டர்.அப்துல்கலாம் அவர்களின் கண்டுபிடிப்பு இது என்பது நாம் பெருமைபடகூடிய ஒரு விஷயம்.

இந்த நவீன செயற்கைகால் ஒன்றின் மொத்த எடையே முக்கால் கிலோ தான். ஷாக்ஸ் மாட்டுவதை போன்று மாட்டிக்கொள்ளலாம். வாகனம் ஓட்டலாம், வலி ஏதுமின்றி வழக்கமான எந்த வேலையிலும் ஈடுபடலாம். பழைய காலிபர் ஷூவின் விலை நான்காயிரம் என்றால் இதன் விலை 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை இருக்கும். இந்த விலை காரணமாக புதிய செயற்கைகால் இன்னும் பிரபலமாகவில்லை. இதை பற்றி தெரிந்தவர்கள் இதன் அதிக விலையின் காரணமாக வலியுடன் வாழ்க்கையை தொடருகின்றனர்.

ஊனமுற்றவர்கள் மறுவாழ்வு துறையோ பட்ஜெட் காரணமாக பழைய ஷூவையே கொடுக்கின்றனர். வலி இன்மைக்காக உருவாக்கப்பட்ட ஒன்றை அதிக விலை காரணமாக வாங்க வழி இல்லாமல் தவிப்பது கொடுமை.

இந்த வலியை அன்றாடம் அனுபவித்தவர் சென்னையை சேர்ந்த திரு.மின்னல் பிரியன். அதன் பிறகு இவர் நவீன காலிபர் வாங்கி அணிந்து அதன் அருமையை முழுமையாக உணர்ந்திருக்கிறார். இத்துடன் இவர் இருந்திருந்தால் நம்மை போன்ற ஒரு சராசரி மனிதராக மட்டுமாகவே இருந்திருப்பார். ஆனால் தான் பெற்ற இன்பத்தை, வலி அனுபவிக்கும் பிறரும் பெறவேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் இவர் மேற்கொண்ட செயல் தான் மிக ஆச்சர்யம்.

இவர் பெரிய வசதியானவர் இல்லை, ஆனால் தனக்கு தெரிந்தவர்களிடத்தில் பணம் கேட்டு பெற்று இந்த நவீன ஷூவை மாற்றுதிறனாளிகளுக்காக வாங்கி, அதை அவர்களுக்கு இலவசமாக வழங்குவதை ஒரு சேவையாக செய்து வருகிறார். இதுவரை இருபது பேருக்கு வாங்கி கொடுத்திருக்கிறார். பழைய காலிபர் ஷூவுடன் ரோட்டில் நடக்க முடியாமல் யாராவது சென்றால், அவர்களிடம் வலிய சென்று அவரது காலை அளவெடுத்து புது ஷூவை வாங்கி அணிவித்து மாட்டி அந்த புதிய நடையை பார்த்து சந்தோஷபடுகிறார் இந்த மின்னல் பிரியன்…!
இவரது இந்த சீரிய சேவைக்கு மிக பக்க பலமாக இருப்பது இவரது துணைவியார் திருமதி பவானி அவர்கள்.

திரு.மின்னல் பிரியன் மேற்கொண்டுள்ள இதர பணிகள்

* ‘அன்பு கரம்’ மாற்று திறனாளிகளுக்கான மாத இதழில் துணை ஆசிரியர்.

* தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நல்வாழ்வு சங்கம் (அரசு பதிவு )
மாநில துணை பொதுசெயலாளர்.

* திரைத்துறையில் உதவி இயக்குனர்,பாடலாசிரியர்.

நெகிழ்ச்சியான ஒரு நிகழ்வு

போன வாரத்தில் ஒரு நாள் மதுரையில் இருந்து ஒருவர் மின்னல் பிரியனை தொடர்பு கொண்டு.’ எனக்கு இந்த காலிபர் வேண்டும், எவ்வளவு பணம் வேணும்’ என்று கேட்டு இருக்கிறார். அதற்கு பிரியன் ‘ஒரு பைசா கூட வேண்டாம், நான் இலவசமா தருகிறேன்’ என்று சொல்லி இருக்கிறார். உடனே அவர் திடுக்கிட்டு, ‘இல்லைங்க நான் ஒரு பிரபல வக்கீல், பணம் கொடுத்தே வாங்கிக்கிறேன், என் காலை அளவெடுக்க வேண்டியது இருப்பதால் நேரில் வந்து சந்திக்கிறேன்’ என்று கூறி சென்னை வந்து சந்தித்து இருக்கிறார். நேரில் பிரியனின் எளிமையை பார்த்து மிக வியந்து, உங்களின் சேவைக்கு முன் நான், என் பணம் இரண்டும் எம்மாத்திரம், எனது காலிபருக்கு நான் பணம் கொடுத்துவிடுகிறேன், மேலும் மூன்று பேருக்கு தேவையான காலிபரையும் ரெடி பண்ணுங்கள், அந்த செலவு முழுதும் நான் ஏற்றுக் கொள்கிறேன்’ என்று சொல்லி இருக்கிறார் !!

இது தாங்க மனிதம் ! இது போல் உதவி செய்ய மனம் கொண்டவர்கள் நம்மை சுற்றி நிறைந்து இருக்கலாம்…இப்படி அவர்களை ஒருவருக்கு ஒருவர் இணைத்து வைப்பது இறைவனின் செயல் மட்டுமல்ல நம் போன்றோரின் முயற்சியும் தான்.

அதனால் நண்பர்களே ! உங்களிடம் இரண்டு வேண்டுகோள்கள் வைக்கிறேன்

முதல் வேண்டுகோள்

உங்களுக்கு தெரிந்த மாற்றுத்திறனாளிகள் இருந்தால் அவர்களிடம் பிரியன் அவர்களின் முகவரி, தொலைபேசி எண் கொடுங்கள். தொடர்பு கொண்டு முன் அனுமதி வாங்கிக்கொள்ள சொல்லுங்கள். நீங்கள் செய்ய போகும் இந்த சிறு உதவி, மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு பேருதவியாக இருக்கும். செய்வீர்களா பதிவுலக நட்புகளே ?!

முகவரி

கவிஞர் மின்னல் பிரியன்
310 A குளக்கரை 3வது தெரு,
துரைப்பாக்கம்
சென்னை – 97.

தொலைபேசி எண்
+91 8925373001
+91 9842293774

Join the Conversation

2 Comments

Share Your Thoughts...

  1. Your given office no is not in use. so please give me a working numbers for i need your help…
    9444946130 This is my no please contact As Soon As Possible.
    Thanks & Regards
    V.J.Umamaheshwaran

%d bloggers like this: