ஊனம் ஒரு குறையில்லை சாதிக்கும் மாற்றுத்திறனாளி

| | posted on:Success Stories

பட்டப்படிப்பை முடித்து, அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு மத்தியில், தனது கால்களையே கைகளாக்கி, மொபைல்போன் ரிப்பேர் செய்யும் சுயதொழில் மூலம் சாதித்து காட்டி வருகிறார் மாற்றுத்திறனாளி ஒருவர். சென்னை, கிழக்கு கொளத்தூர் சாலையில் மொபைல்போன் சர்வீஸ் கடையை நடத்துபவர் கே.முகமது அசைன், 32. பிறவியிலேயே இரண்டு கைகள் இன்றி பிறந்ததால், மனம் தளராமல் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் சேர்ந்து படித்தார்.

தன்னுடைய இரண்டு கால் களால் பேனாவை பிடித்து எழுதி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். பின், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, சாதனை படைத்தார்.

மாற்றுத் திறனாளி என்ற அடிப்படையில், அரசு வேலைக்கு விண்ணப்பித்தார். ஆனால், அரசு வேலை எட்டாக்கனியாகிவிட்டது. படிப்பு மட்டும் பயன்தராது என்பதை உணர்ந்த அசைன், அதன்படி, வீட்டில் எலக்ட்ரானிக் சாதனங் களை ரிப்பேர் செய்யும் தனது அண்ணனின் உதவியுடன், எலக்ட்ரானிக் சாதனங்கள் ரிப்பேர் செயய்யும் தொழிலை கற்றுக் கொண்டார். அடுத்தகட்டமாக, சொந்தமாக எலக்ட்ரானிக் சாதனங்கள் சர்வீஸ் கடையை துவக்கினார். இதில், ஆரம்பத்தில் நல்ல வருமானம் கிடைத்தது.

காலப்போக்கில், புதிய வரவான மொபைல்போனின் பயன்பாடு அதிகரிப்பிற்கேற்ப, மொபைல்போன் சர்வீஸ் பயிற்சியை கற்றுக் கொண்டார். கைகளால் மட்டுமே மொபைல்போன் ரிப்பேர் செய்பவர்கள் மத்தியில், தன்னுடைய இரண்டு கால்களாலும் ரிப்பேர் செய்ய முடியும் என்பதை அசைன் நிரூபித்துக் காட்டி வருகிறார். குறைந்த செலவில் மொபைல்போன் ரிப்பேர் செய்வதால், இவருக்கு இப்பகுதியில் நிறைய வாடிக்கையாளர்கள் பெருகிவிட்டனர்.

இது குறித்து அசைன் கூறியதாவது:கடந்த ஆறு ஆண்டுகளாக மொபைல்போன் சர்வீஸ் கடையை தனியாக நடத்தி வருகிறேன். கடையை திறந்ததும், மின்சார சுவிட்ச்சை யாருடைய உதவியின்றி, நானே காலை உயர்த்தி போடுவேன். பின், மொபைல்போன் ரிப்பேர் செய்வதற்குரிய இடத்தில், ஸ்பேர் பார்ட்சுகளை வைத்துக் கொள்வேன். ஸ்பீக்கர் மாற்றுவது;சாப்ட்வேர் பிரச்னையை சரி செய்வது;போன் போர்டு மாற்றுவது உள்ளிட்ட அனைத்தும் செய்வேன். முக்கிய உதிரிபாகங்களை வாங்க நானே நேரில் செல்கிறேன்.

ஆரம்பத்தில் பல மணிநேரம் உடலை வளைத்து, கால்களால் ரிப்பேர் செய்தேன். ஒரு மணிநேரம் தொடர்ந்து செய்தால் அரை மணிநேரம் ஓய்வு தேவைப்படுகிறது. உடலை வளைத்து ரிப்பேர் செய்வதால், முதுகுப் பகுதியில் வலி ஏற்படுகிறது. எனக்கு திருமணமாகி, மனைவி மற்றும் இரண்டரை வயதில் குழந்தை இருக்கின்றனர். என்போன்றோர்க்கு அரசு உதவி செய்ய முன்வர வேண்டும். – இவ்வாறு அசைன் தெரிவித்தார்

Share Your Thoughts...