காரைக்குடியில் கல்விப் பிச்சை - enabled.in

காரைக்குடியில் கல்விப் பிச்சை

‘பிச்சை புகினும் கற்கை நன்றே!’ என்கிறது மூதுரை. காரைக்குடி பேருந்து நிலையத்தில் மாற்றுத் திறனாளி செல்வராஜ் பிச்சை எடுத்து 13 ஏழைக் குழந்தைகளைப் படிக்கவைத்துக்கொண்டு இருக் கிறார்.

”எனக்குச் சொந்த ஊரு உசிலம்பட்டிங்க. அஞ்சு வயசு இருக்கிறப்ப, திண்ணையில் இருந்து கீழே விழுந்து காய்ச்சலில் படுத்துட்டேன். அப்போ என் கால் முடமாகிப்போச்சு. இருந்தாலும் தன்னம்பிக்கையோட, 1966-ல் பி.ஏ. பொருளாதாரம் முடிச்சேன். படிச்சு முடிச்சதும் மின் வாரியத்துலயும் லைப்ரரியிலயும் வேலை கிடைச்சது. ஆனா, அதுக்கு லஞ்சமா 2000 ரூபாய் கேட்டாங்க. குறுக்கு வழியில் வேலையில் சேர எனக்குப் பிடிக்கலை. அதுக்காக, சும்மா இருக்கவும் பிடிக்கலை. சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்ட ஆரம்பிச்சேன். அப்படியே சைக்கிள் மெக்கானிக் வேலைகளைக் கத்துக்கிட்டு, மதுரை, சென்னை, புதுச்சேரி, எர்ணாகுளம், திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம்னு ஊரு ஊராப் போனேன். எங்கேயும் எனக்கு வேலை நீடிக்கலை. நான் படிச்ச படிப்பு எனக்கு வேலை கொடுக்கலை.

இருந்தாலும் அந்தப் படிப்பு வீணாப் போயிடக் கூடாதுனு நெனச்சேன். எங்கே போனாலும், தங்கி இருக்கும் இடத்தில் நாலைஞ்சு பிள்ளை களுக்கு இலவசமா டியூஷன் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சேன். அங்கே இங்கே சுத்திட்டு, கடைசியா காரைக்குடிக்கு வந்து சேர்ந்தேன். ‘நான் ஒண்டியாளு.. எந்த வேலை கொடுத்தாலும் பாக்குறேன்’னு சொல்லி பல இடங்கள்ல வேலை கேட்டேன். செட்டியார் ஒருத்தரு சைக்கிள் கடையில் 50 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குக் கூப்பிட்டாரு. 50 ரூபாயைவெச்சு என்ன பண்றது? அதனால, கௌரவம் பாக்காம பஸ் ஸ்டாண்டுல கையேந்த ஆரம்பிச்சுட்டேன். தன்மானத்தை விட்டு பிச்சை எடுக்குறது எனக்கும் பிடிக்கலைதான். ஆனா, என்ன பண்றது… வயிறு இருக்கு. என்னை நம்பி 13 புள்ளைங்க வேற இருக்கு. யாராச்சும் வேலை கொடுத்தா, இப்பவே இந்தப் பொழப்பை விடுறதுக்கு நான் தயாரா இருக் கேன்!” அழுத்தமாகச் சொன்ன செல்வராஜ், ”காலையில் 7 மணியில் இருந்து 11  மணி வரை பஸ் ஸ்டாண்டுல பிச்சை எடுப்பேன். அப்புறம் மதியச் சாப்பாட்டை பார்சல் வாங்கிட்டு வீட்டுக்குப் போவேன். குளிச்சு சாப்பிட்டுட்டு, மறுபடியும்  பஸ் ஸ்டாண்டுக்குப் போவேன். 5 மணி வரைக்கும் பொழப்பைப் பாத்துட்டு வீட்டுக்குக் கௌம்பிடுவேன். 5.30 மணிக்கு எல்லாம் என்கிட்ட டியூஷன் படிக்கிற குழந்தைகள் வீட்டுக்கு வந்துடுவாங்க. 8 மணி வரைக்கும் அவங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பேன். பிளாஸ்டிக் சாமான்கள் விக்கிறவங்க, பினாயில் விக்கிறவங்க பிள்ளை களுக்குத்தான் நான் டியூஷன் எடுக்குறேன். எனக்கு வர்ற வருமானத்துல, நோட்டுப் புத்தகங்கள், ஜியோமென்ட்ரி பாக்ஸ் வாங்கிக் கொடுப்பேன். போன வருஷம் அதுக்காக 2000-ம்  ரூபாய் வரைக்கும் செலவாச்சு. இந்த வருஷம் 1500 ரூபாய் செலவாச்சு. நான் வாங்கித் தர்றதைப் பாக்கும்போது, அந்தப் புள்ளைங்க முகத்தில் நிறைஞ்ச சிரிப்பு வரும். அதுக்காகவே என்ன வேணாலும் பண்ணலாம் சார்!” கும்பிட்டு விட்டு தரையில் காலை இழுத்தபடி நகர்ந்து செல்கிறார் செல்வராஜ்!

Source : http://www.vikatan.com/article.php?mid=1&sid=232&aid=8475

Leave a comment

Share Your Thoughts...