கால்கள் இல்லா மனிதர் ஏறிய வெற்றிப் படிகள்

| | posted on:Success Stories

எனக்கு மட்டும் ஏன் இப்படி? எதற்கு இப்படி? என்ற கேள்விகளையும் புகார்களையும் நாம் அன்றாடம் செய்து கொண்டிருக்கிறோம். எந்த வித உடல் குறையும் இல்லை, நாம் விரும்பியதை தேர்ந்தெடுக்க சுதந்திரம் உண்டு, இருந்தும் வாழ்வின் பாதி நேரங்களில் நமக்கு நிறைவே ஏற்படுவதில்லை. இந்த சிந்தனையை மாற்ற நாம் நிச்சயம் கற்றுகொள்ள வேண்டும், இந்த படங்கள் சொல்லும் பெரிய பாடத்தை!

பெங்க் சுயிலின் வெறும் 78 செ.மீ உயரம். சைனாவின் ஹுனான் ப்ரோவின்ஸ் பகுதியை சேர்ந்தவர். 1995 இல் நடைபெற்ற விபத்தில் தன் உடலின் பாதியை இழந்தவர். அவருடைய உடலின் கீழ் பகுதியும் கால்களும் செயலிழந்து விட்டன.

அறுவை சிகிச்சை நிபுணர்களால் அவர் உடலின் கீழ் பகுதியில் பல தையல்கள் இடப்பட்டு, அவர் உடலின் முக்கியமான உறுப்புகள் அனைத்திலும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. பெங் இத்தனை சிரமத்திற்கிடை யேயும் விடாமல் உடற்பயிற்சி செய்து, முகம் கழுவி, பல் துலக்கி தன் உடலை மிகவும் ஆரோக்கியமாக வைத்து கொண்டார்.

இத்தனை இடர்களையும் தாண்டி உயிர் வாழும் பெங். பல ஆண்டுகளுக்கு பின் இப்போது நடக்கப் பழகிக் கொண்டிருக்கிறார்.

கால்கள் இல்லாத மனிதரால் எப்படி நடக்க இயலும் என்ற நம் கேள்விக்கு பதில் இதோ இந்த படம்! பீஜிங் நகரில் சைனா மறுவாழ்வு மையத்தின் மருத்துவர்கள் ஒரு வித்தியாசமான வழியை கண்டுபிடித்தார்கள். பெங்கின் உடல் முழுவதையும் மூடுவதைப் போல் ஓர் உருளையை வடிவமைத்து அதற்கு இயந்திரக் கால்களைப் பொருத்தினர்.

இது மிகவும் நுட்பமாகவும் கவனமாகவும் கையாளப்பட்டது. தேர்ந்த நிபுணர்களைக் கொண்டு மிக துல்லியமாய் அளவெடுத்து அவருக்கு இயந்திரக் கால்கள் பொருத்தப்பட்டன.

பெங் இப்போது மறுவாழ்வு மையத்தின் நடைபாதைகளில் உற்சாகமாக நடந்து கொண்டிருக்கிறார்.

மருத்துவர்கள் கருத்துப்படி பெங் மற்ற மனிதர்களை போல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார்.

இப்பொது பெங் ஒரு சூப்பர் மார்க்கெட் ஒன்றையும் துவங்கியுள்ளார். 37 வயதாகும் இந்த நம்பிக்கைமிக்க தொழிலதிபரை முன்னோடியாக ஏற்றுக் கொண்டவர்கள் பலர். இன்று பல இடங்களிலும் மாற்றுத்திறனாளிகள் தாம் சந்திக்கும் தடைகள் தாண்டி வெளியே வர பயிற்சிகள் அளிக்கிறார். வெறும் இரண்டடி உயரம் கொண்ட பெங் இன்று அடைந்துள்ள உயரம் நம்மை வியப்பிலும் நாம் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பிலும் ஆழ்த்துகிறது.

பெங் ஒருபோதும் வாழ்க்கை குறித்து புகார் செய்வதே இல்லை. இனி ஒரு முறை யாரேனும் வாழ்க்கை குறித்து புகார் செய்யும் முன்னர் பெங் சுயிலினை மட்டும் நினைவில் கொள்ள வேண்டாம் “வாழ்க்கை” என்பது கடவுள் மனிதர்களுக்கு கொடுத்த வெகுமதி என்பதையும் நினைவில் கொள்வோம்!!!