கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு பேரணியாகச் செல்லும் மாற்றுத் திறனாளிகள்

| | posted on:Multiple Disability

கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு பேரணியாகச் செல்லும் மாற்றுத் திறனாளிகள்

handicap1

கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரையைச் சேர்ந்த 50 மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகனங்களில் ஜூன் 16-ம் தேதி பேரணியாக செல்லவுள்ளனர்.   இந்தப் பேரணிக்கு அனுமதியளிக்கக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் சி.காமராஜிடம் வெள்ளிக்கிழமை அனுமதி கோரி மனு அளித்தனர்.  மனிதநேய மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையம் மற்றும் ஏஐஎம் கிராம வளர்ச்சிநிறுவனமும் இந்தப் பேரணிக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.   ஜூன் 16-ம் தேதி மதுரை காந்தி மியூசியத்தில் இருந்து தொடங்கும் இந்தப் பேரணி வாடிப்பட்டி, கொடைரோடு, செம்பட்டி, கன்னிவாடி, ஒட்டன்சத்திரம், தாராபுரம், பல்லடம் வழியாக ஜூன் 21-ம் தேதி அதிகாலை கோவையைச் சென்றடையும்.   இதுகுறித்து மனிதநேய மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த நிர்வாகி அசரப் கூறியது:  திமுக ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்காக பல வகையில் ஆக்கமும், ஊக்கமும் அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் கருணாநிதி முயற்சியால் நடத்தப்படும் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.   இதில் 50 மாற்றுத்திறனாளிகள் தங்களது மூன்று சக்கர சைக்கிளில் செல்ல உள்ளனர். மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ் இந்தப் பேரணியைத் தொடக்கி வைக்கவுள்ளார். மாநகர் போலீஸ் கமிஷனர் பி.பாலசுப்பிரமணியன் தலைமை வகிக்கிறார். மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவர் க.இசக்கிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Share Your Thoughts...