தங்கம் வென்ற மாற்று திறனாளி பெண்

| | posted on:Success Stories

ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவி.,யை சேர்ந்த மாற்று திறனாளி ஜெயக்கொடி, மாநில அளவிலான குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.differently abled women

மங்காபுரத்தை சேர்ந்தவர் ஜெயக்கொடி (29). இவரது ஐந்து வயதில் போலியோவால் பாதிக்கப் பட்டு வலது கால் செயலிழந்தது. தாய் இறந்து, தந்தையும் வேறு திருமணம் செய்து விட்டதால், உடன் பிறந்தவர்கள் தயவால் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தார். பின் தீப்பெட்டி அட்டை ஒட்டி தனது வாழ்நாளை கழித்து வருகிறார். சொந்த வாழ்க்கையில் பிரச்னை ஏற்பட்டாலும் விளையாட்டில் ஆர்வத்தை மட்டும் விட வில்லை. கடந்தாண்டு மாற்று திறனாளிகளுக்கான மாநில அளவில் நடந்த குண்டு எறிதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். கடந்த வாரம் அருப்பு கோட்டையில் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் கமிட்டி சார்பில் மாநில அளவில் நடந்த விளையாட்டு போட்டியில் தட்டு எறிதல், குண்டு எறிதல் போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். வரும் 19ம் தேதி பெங்களூருவில் நடக்கவுள்ள தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்கிறார்.

இது குறித்து ஜெயலட்சுமி கூறியதாவது: காலில் ஊனம் ஏற்பட்டதற்காக வருந்தாமல் தொடர்ந்து பல விளையாட்டு போட்டிகளில் கலந்து வெற்றி பெற்று வருகிறேன். தற்போது உறவினர்கள் உதவியில்லாததால், தீப்பெட்டி அட்டைபெட்டி ஒட்டி அதில் கிடைக்கும் குறைந்தளவு வருமானத்தை கொண்டு வாழ்ந்து வருகிறேன். மாற்று திறனுடையோருக்கு தமிழக அரசு பல உதவிகளை செய்து வருகிறது . நான் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவதை வைத்து அரசு எனக்கு ஏதாவது வேலை கொடுத்து உதவினால் எனது வாழ்க்கை பிரகாசமாக இருக்கும், என்றார்.