நான் அழகிய பெரியவன்

| | posted on:Success Stories

ழகியலும் அரசியலும் சம விகிதத்தில் கலந்த வீச்சான எழுத்து அழகிய பெரியவனுடையது!

90-களில் அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி தமிழ் தலித் இலக்கியத்தில் ஒரு பாய்ச்சல்நிகழ்ந்த போது, அழகிய பெரியவன் எழுத்துக்கள் தனித் துவத்துடன் வெளிவரத் தொடங்கின. தீட்டு, தகப்பன்கொடி, நீ நிகழ்ந்தபோது, உனக்கும் எனக்குமான சொல், மீள்கோணம் உள்பட கவிதை, கதை, கட்டுரை எனப் பல திசைகளிலும் எழுதிச் செல்லும் அழகிய பெரியவன், இலக்கியத்தில் ஒதுக்கப்பட்டதாக இருக்கும் வட தமிழ்நாட்டின் முக்கியமான குரல்!

”வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டுதான் அப்பாவின் சொந்த ஊர். நான் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக, ஆம்பூர் பக்கம் எல் மாங்குப்பம் என்ற ஊரில் இருந்த அம்மா வழிப் பாட்டி வீட்டுக்கு அனுப்பப்பட்டேன். அம்மாவுடன் பிறந்த தம்பிகள் ஐந்து பேர். அதில் ஒரு மாமாவின் பெயர் கங்கை ஏசுபாதம். அவர் 1968-லேயே பச்சையப்பன் கல்லூரியில் தத்துவவியல் படித்தவர். கவிஞர், நாடகக்காரர், நல்ல படிப்பாளி. மற்ற மாமாக்களும் கவிதை எழுதுவார்கள், நாடகம் போடுவார்கள். எல் லோருமே தீவிர திராவிட இயக்கப் பற்று உள்ள வர்கள். ஏசுபாதம் மாமா, அண்ணா துரையை அழைத்து வந்து கூட்டம் எல்லாம் போட்டு இருக்கிறார்.

என் அப்பாவின் அப்பா சின்னப்பன் ஒரு தெருக்கூத்து வாத்தியாராக இருந்தார். இரவு நேரங்களில் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து உரத்த குரலில் பாடிக்கொண்டே இருப்பார். எல்லாம் கேட்டு வளர்ந்தேன். அரசியல்,கவிதை, நாடகம் என்பது எல்லாம் என்னைச் சுற்றியே இருந்தது. மாமாவின் சேகரிப்பில் ஏராளமான புத்தகங்கள் இருந்தன. அவற்றை அடுக்கிவைப்பது எனக்கொரு பொழுதுபோக்காக இருந்தது. இந்த நிலையில் ஏதோ ஒரு மன அழுத்தத்தில் ஏசுபா தம் மாமா தற்கொலை செய்துகொண்டுவிட்டார். அதன் பிறகு குடும்பம் கடுமையான சிரம திசையை சந்தித்தது. மாமாவின் மரணம் எனக்குள்ளும் பாதிப்பை உண்டுபண்ணியது. மாற்றுத் திறனாளியான நான் ஏற்கெனவே மனதளவில் கடுமையான தாழ்வு மனப் பான்மையில் இருந்தேன். யாருடனும்விளை யாடுவது, இணைந்து பழகுவது இல்லை. சமூகத்தின் புறக்கணிப்புகளில் இருந்து தப்பிக்க நான் புத்தகங்களிடம் சரணடைந் தேன்.

வேலூர் ஊரிசு கல்லூரியில் படித்து முடித்து ஓரு சில வருடங்கள் தொண்டு நிறு வனம் ஒன்றில் வேலை பார்த்தேன். பல கிராமங்களுக்கு நேரில் சென்று அங்கேயே தங்கியிருந்த  அனுபவம் மிக முக்கியமானது. ஒருமுறை பீடி தொழிற்சாலையில் சிறுவர் களை சங்கிலியால் கட்டிவைத்து இருந்ததைக் கண்டு, அவர்களை மீட்டோம். இப்படிப்பட்ட களப் பணிகள்தான் எழுத்தாளன் என்பதைக் காட்டிலும் மனதுக்கு நிறைவு அளிப்பதாக இருக்கின்றன. அந்தக் காலகட்டத்தில் மிகத் தீவிரமாக படிக்க ஆரம்பித்தேன். நண்பர் களிடம் 100, 200 புத்தகங்களைக் கடன் வாங்கி இரண்டு, மூன்று மாதங்களில் படித்து முடித்து, அதைக் கொடுத்து புதிய புத்தகங்கள் கடன் வாங்குவேன்.

என் சொந்தப் பெயர் அரவிந்தன். நா.பார்த்தசாரதியின் ‘குறிஞ்சி மலர்’ கதையில் வரும் நாயகனின் பாத்திரப் பெயரைஎனக்கு வைத்திருந்தார் மாமா. நான் பிற்பாடு எழுத் தாளன் ஆவேன் என்று தெரிந்துவைத்தாரோ என்னவோ? நான் எழுத வந்தபோது அர விந்தன் என்ற பெயரில் சிலர் இருந்தார்கள். புனைப்பெயர் தேடும்போது கல்வெட்டு தொடர்பான பத்திரிகை செய்தி ஒன்றில் அழகிய பெரியவன் என்ற பெயரைப் பார்த் தேன். பிடித்திருந்தது. தலித்களை அசிங்க மானவர்கள் என்று சொல்லும் போக்குக்கு எதிரான கலகக் குரல் ஒன்று அந்தப் பெய ரில் இருந்ததால், அதை சூட்டிக்கொண்டேன். உண்மையில் இந்தப் பெயர் வைணவ சார்பு உள்ளது.

நான் எழுத வந்தபோது ‘தலித் இலக்கியம் ராவா இருக்கு. அதில் அழகியல், நுட்பம், கதை சொல்லும் பாங்கு போன்றவை இல்லை’ என்று சொல்லப்பட்டது. நான் அழகியல் கூறுகளையும் உள்ளடக்கி  எழுதினேன். இதையே என் பலமாக விமர்சகர்கள் சொல்கின்றனர். ஆனால், ‘வேதனையையும், வலியையும் சொல்ல வேண்டிய எழுத்தில் அழகியல் என்பது நீர்த்துப்போகச் செய்கிறது’ என்பது என் மீதான எதிர்க் கருத்தாகவும் வைக்கப்படுகிறது. நான் அப்படிக் கருதவில்லை. தலித் களின் மண் சார்ந்த, மக்கள் சார்ந்த போராட்ட வாழ்க்கை என்பதே அழகியலோடு கூடியதுதான். தவிரவும் தலித் என்றால் அழுதுகொண்டேதான் இருக்க வேண்டுமா? அவனுக்குக் கொண்டாட்டங்கள் வேண் டாமா? தமிழில் தலித் இலக்கியம் தொடங்கி 20 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். அழுகை, முறையீடு, புலம்பல் என்பதை நாம் தாண்டிச் செல்ல வேண்டி இருக்கிறது.

பொதுவாக, தமிழ் இலக்கியத்தில் வட தமிழ்நாடு அதிகம் பதிவாகவில்லை. தர்மபுரி, வேலூர், திருவள்ளூர் போன்ற பகுதிகள் எல்லாம் தமிழ்நாட்டின் நிலப்பரப் பாகவே பலருக்கு தோன்றுவது இல்லை. இதற்கு காரணம், இந்தப் பகுதிகள் ஆந்திர, கர்நாடக எல்லைகளை ஒட்டி அமைந்திருக்கின்றன. முன்பு இங்கு ஆட்சி செலுத்தியவர்கள் தெலுங்கர்களும், நவாப்புகளும் தான். அவர்கள், அவர்களது மொழிக்குத்தான் முக்கி யத்துவம் கொடுத்து இருப்பார்கள். இதை எல்லாம் தாண்டி, இந்தப் பகுதி எந்தவித வேலைவாய்ப்புகளும் அற்ற,கடுமையான வறட்சிப் பிரதேசம். தனது வயிற்றுப் பாட்டைப் பார்ப்பதற்கே தவிக்கும் மனிதர்கள் எப்படி கலை,இலக்கியம் பக்கம் கவனம் செலுத்துவார்கள்?

என் அப்பா வழி உறவினர்கள் அதிகம் படித்தவர்கள் இல்லை. என் தந்தை சமீப காலம் வரையிலும், தோல் தொழிற்சாலையிலும், பீடிக் கம்பெனியிலும்தான் வேலை பார்த்தார். அப்பா வழி உறவினர்கள் பலரும் இந்த வேலைகளைதான் இன்னமும் செய்துவருகின்றனர். ஆனால், என் தாய் வழி உறவினர்கள் பெரும்பாலும்நன் றாகப் படித்தவர்கள். இதனால், சாதி இந்துக்கள் மத்தியி லும் அவர்களுக்கு மரியாதை இருந்தது. என் கடைசி மாமா மருத்துவராக இருந்தார். அவரிடம் வைத்தியம் பார்க்க எல்லா சாதியினரும் வந்தனர். முதல் கட்டமாக சாதி இழிவில் இருந்து தன்னை மீட்டுக்கொள்ள தலித் களுக்கு முக்கியத் தேவையும் முதல் தேவையும் கல்வி தான். என் சொந்த அனுபவத்தில் நான் கண்ட உண்மை இது!”

source : http://www.vikatan.com/article.php?mid=10&sid=87&aid=2879