மாற்றுத்திறனாளிகளின் கார்!

| | posted on:Success Stories

மாற்றுத் திறனாளிகளுக்கான காரை, கும்பகோணத்தைச் சேர்ந்த உதயகுமார் எனும் மாற்றுத் திறனாளியே உருவாக்கியுள்ளார். ”காரை இயக்க கால்கள் அவசியம் இல்லை. எந்த வகையான காரையும் மாற்றி அமைத்து சிரமமின்றி ஓட்ட முடியும்” என்கிறார் உதயகுமார்.

மாற்றுத்திறனாளிகளின் கார்!

‘சின்ன வயதிலிருந்தே எலெக்ட்ரானிக்ஸ் மேல் எனக்கு அலாதி பிரியம். மூன்று வயதில் போலியோவினால் பாதிக்கப்பட்டு, இரண்டு கால்களையும் இழந்துவிட்டேன். எம்.பி.ஏ வரை படித்துள்ள நான், கார் ஓட்ட ஆசைப்பட்டேன். இதுதான் முதல் விதை. கார் தொடர்பான அனைத்து செய்திகளையும் இன்டர்நெட்டில் தேடித் தேடிப் படித்தேன். இப்போது தயாரிக்கப்படும் மிகப் பெரும்பாலான கார்களில் பவர் ஸ்டீயரிங் இருக்கிறது. இதனால், வலது கையால் மட்டுமே காரை எளிதில் இயக்க முடியும். அதனால் பிரேக், கிளட்ச், ஆக்ஸிலேட்டர் மூன்றையும் இடது கையில் சுலபமாகப் பயன்படுத்தும் வகையில் மாற்றினேன்.

பல கட்ட முயற்சிகளுக்குப் பின்புதான் வெற்றி பெற்றேன். மாற்றுத் திறனாளிகளுக்கான காரை உருவாக்கிய பிறகு, லைசென்ஸ் வாங்க மிகவும் சிரமப்பட்டேன். தமிழகத்தில் இதைப் பதிவு செய்யத் தயங்கினர். முடியாது என்பதற்குக் காரணங்கள் பல சொன்னார்கள். தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முகத்தை நேரில் சந்தித்து, அவரையும் காரில் அமர வைத்து ஓட்டிக் காட்டினேன். தேர்தல் சமயம் என்பதால், சிறிது காலத்தில் எனக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

இதுவரை சுமார் 60 மாற்று திறனாளிகளுக்கு இதுபோன்று காரில் மாற்றம் செய்து கொடுத்துள்ளேன். இதற்கிடையில் எனது கண்டுபிடிப்பைப் பற்றிக் கேள்விப்பட்ட பெங்களூரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான பாஸ்கர் என்னைத் தொடர்பு கொண்டார். நான் பெங்களூர் சென்று அவருடைய காரில் மாற்றங்கள் செய்து கொடுத்தேன். அதை கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் முன்னிலையில் ஓட்டிக் காட்டி லைசென்ஸ் வாங்கியுள்ளோம். ‘மாற்றுத் திறனாளி ஓட்டும் வாகனம்’ என லைசென்ஸ் கொடுத்து, வாழ்நாள் முழுவதும் சாலை வரி விலக்கும் கொடுத்துள்ளது கர்நாடக அரசு. என் வாழ்வின் மிக முக்கியமான நிகழ்வு இது. இன்னும் இந்த காருக்கு  தமிழக அரசு போக்குவரத்துத் துறையில் அங்கீகாரமும், லைசென்ஸும் வழங்கவில்லை. தொடர்ந்து போராடி வருகிறேன். சாதாரண மனிதர்களைப் போல எங்களுக்கும் அனைத்து விதமான சோதனைகளும் நடத்தட்டும். எந்த வகையிலும் நாங்கள் எதிலும் குறைந்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கிறேன்” என்று நம்பிக்கையோடு முடித்தார் உதயகுமார்.

Source : http://www.vikatan.com/article.php?mid=7&sid=153&aid=5515