10 தேவதைகள் - enabled.in

10 தேவதைகள்

துயரத்தைப் பங்கிட்டு உயரத்தைத் தொட முயலும் நம்பிக்கைப் பெண்களின் கதை இது!

”எங்களுக்குத் தேவை இரக்கம் இல்லை. பாவப்பட்ட பார்வை வேண்டாம். உலகத்தைப்போல, உங்களைப்போல சராசரியான ஒரு வாழ்க்கை!” – சொற்களில் தெறிக்கிறது நம்பிக்கையும் எதிர்காலமும்!

தூத்துக்குடி ஜே.எஸ்.நகரின் சிறிய வீடு ஒன்றில் மூன்று சக்கர நாற்காலிகளுக்கு அப்பால் புன்னகையுடன் வரவேற்கிறார்கள்  10 பெண்களும். அனைவரும் மாற்றுத் திறனா ளிகள். வெவ்வேறு காரணங்களால் குடும்பத் தாலும் சமூகத்தாலும் ஒதுக்கப்பட்டவர்கள். இப்போது 10 பேரும் ஒன்று சேர்ந்து வாட கைக்கு ஒரு வீடு பிடித்து, வாழ்க்கையை எதிர் கொள்கின்றனர்.

நம்பிக்கைக் கதை சொல்லத் தொடங்குகிறார் மல்லிகா. ”எஸ்தர், மாரீஸ்வரி, ரெங்கநாயகி, முத்துமாரி, மாரியம்மாள், கண்மணி, தேவி, சண்முகம், ராமலட்சுமி, நான்… நாங்க 10 பேர்! எங்களில் சிலருக்கு அப்பா-அம்மா கிடையாது. சில பேருக்கு இருந்தும் இல்லாத மாதிரி. எனக்கு அம்மா கிடையாது. அப்பா ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டார். கால் ஊனமா இருந்த என்னை சித்திக்குப் பிடிக்கலை. பாளையங்கோட்டையில் ஓர் அநாதை இல்லத்தில் சேர்த்துவிட்டாங்க. அங்கேயே தங்கி ஞி.சி.கி., படிச்சேன். மறுபடி வீட்டுக்குப் போனப்போ, சித்தி சேர்த்துக்கலை. ‘என்ன செய்றது, எங்கே போறது’ன்னு தெரி யலை. என்கூடப் படிச்ச முத்துமாரி ஞாபகம் வந்து, அவங்களுக்குப் பேசினேன். அவங்க உடனே தூத்துக்குடிக்கு வரச் சொன்னாங்க. இன்னிக்கு நான் உயிரோட இருக்கவே அவங்க தான் காரணம். இப்போ ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோர்ல 2,500 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்க்கிறேன். அந்தக் காசைச் சேர்த்துவெச்சு, என் தங்கச்சியை ப்ளஸ் டூ படிக்கவைக்கணும்!” – அமைதியாகப் பேசுகிறார் மல்லிகா. இவர்களில் நான்கு பேர் மட்டுமே வேலைக்குச் செல் கின்றனர். மற்றவர்களுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை.

காய்கறி நறுக்கிக்கொண்டு இருந்த முத்துமாரி, ”எங்க குடும்பம் வசதியானதுதான். ஆனா, பணம் இருந்த அளவுக்கு யாருக்கும் பாசம் இல்லை. அவங்களே என்னை ஒரு ஆசிரமத்தில் சேர்த்துவிட்டாங்க. 10-ம் கிளாஸ் படிச்சுட்டு வீட்ல இருந் தேன். ஆனா, அம்மா செத்த பிறகு, அங்கே இருக் கப் பிடிக்கலை. இப்போ 1,200 ரூபாய் சம்பளத் துக்கு மளிகைக் கடையில் வேலை பார்க்குறேன்!” என்கிற முத்துமாரி, மல்லிகாவின் அறிமுகம் மூலம் இவர்களுடன் இணைந்துகொண்டார்.

இப்படி ஒருவரின் நட்பு மூலம் இன்னொரு வராக… தூத்துக்குடி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 10 மாற்றுத் திறனாளிகள் ஒரே வீட்டில் சேர்ந்து வசிக்கிறார்கள்.

”எங்க எல்லாருக்குமே உடம்புல பிரச்னை இருக்கு. ஒருத்தரோட பிரச்னை இன்னொருத்தருக்குத் தெளிவாப் புரியும். வேலைக்குப் போறவங்க மத்தவங்களையும் சேர்த்துக் கவனிச்சுக்குறோம். ஆனா, நாங்க யாரும் குறைஞ்சது 5,000 ரூபாய் சம்பளம்கூட வாங்கலை. குறைஞ்ச சம்பளத்தில் 10 பேர் சாப்பிட்டு, வாடகை கொடுத்து… ஒவ்வொரு மாசத்தையும் ஓட்டுறது பெரிய பிரச்னை. பல நேரங்கள்ல வாடகை கொடுக்க முடியாம, வீட்டைக் காலி பண்ணிட்டும் வந்திருக்கோம்!” என்கிறார் முத்துமாரி.

இவர்களின் நிலையைப் பார்த்து அருகில் உள்ள சிலர் தங்களின் ரேஷன் கார்டுகளைக் கொடுத்து, சமையல் பொருட்கள் வாங்கிக்கொள்ளச் சொல்கிறார்கள். ஆனால், அதை வாங்கவும் பணம் வேண்டுமே? பல நேரங்களில் பசியும் பட்டினியுமே இவர்களின் உணவு!

புத்தகங்களில் மூழ்கிக்கிடக்கிறார் கண்மணி. ”நான் பி.ஏ., பி.எட்., முடிச்சிருக் கேன். ஒரு ஸ்கூல்ல டீச்சரா வேலை பார்த் தேன். நான் பாடம் எடுக்க வேண்டிய வகுப்பு முதல் மாடியில் இருந்ததால், என் னால் மாடிப் படி ஏறி இறங்க முடியலை. அதனால், என்னை வேலையை விட்டு போகச் சொல்லிட்டாங்க. இப்போ ஒரு ஃபைனான்ஸ் ஆபீஸ்ல வேலை பார்க்குறேன். சம்பளம் 2,000. எப்படியாச்சும் டீச்சர் வேலை யில் சேரணும். நான் நல்லாப் பாடம் நடத்துவேன். மாடிப் படி இல்லாம, தரையிலயே கிளாஸ் ரூம் இருக்குற பள்ளிக்கூடங்களும்  இருக்கும்ல?” – என்னவென்று பதில் சொல்வது இவருக்கு? இவ ருடைய முன்னாள் மாணவர்கள் கண்மணியின் துயரைச் சிறிதள வேனும் குறைக்கும் பொருட்டு, அவரிடம் டியூஷன் படிக்கச் சேர்ந்து இருக்கிறார்கள்.

ரெங்கநாயகியின் கதை இன்னும் உருக்கமானது. ”சின்ன வயசிலேயே அம்மாவும் அப்பாவும் இறந்துட்டாங்க. பெரியம்மா வீட்லதான் வளர்ந்தேன். அவங்களுக்கு என்னை மாதிரியே கால் ஊனத்து டன் ஒரு பையன் இருந்தாங்க. என்னையும் அண்ணனையும் பாசமாக் கவனிச்சுக்குவாங்க. ஆனா, பெரியம்மாவுக்கு வயசாகிடுச்சு. தினமும் எங்க ரெண்டு பேரையும் பார்த்து மனசு உடைஞ்சு அவங்க அழுவுறதை என்னால் பார்க்க முடியலை. அதான் ‘யாருக்கும் நம்மால் கஷ்டம் வேண்டாம்’னு இங்கே வந்துட்டேன்!” என்கிற ரெங்கநாயகியின் உடனடித் தேவை ஒரு நல்ல வேலை!

கோவில்பட்டி மாரீஸ்வரி வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். ஆனாலும், பாசம் காட்ட ஆட்கள் இல்லாததால், இங்கு வந்துவிட்டார். இரண்டாம் ஆண்டு பி.ஏ., இலக்கியம் படித்துக்கொண்டே பகுதி நேர வேலை தேடிக்கொண்டு இருக்கும் மாரீஸ்வரியின் கனவு, கல்லூரி விரிவுரையாளர் ஆவது. ஸ்ரீவைகுண்டம் எஸ்தரை அவரது பெற்றோரே வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டார்கள். ”ஊனமுற்றோர் உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்தோம். இதுவரை ஒரு பதிலும் இல்லை. எங்களில் ஒரு சிலர்கிட்ட இன்னும் மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டைகூட இல்லை. இது எல்லாத்தையும்விட கொடுமை, மூன்று சக்கர சைக்கிள் எங்க எல்லோருக்கும் இல்லை. இதனால் இருக்குற சைக்கிளில் டபுள்ஸ் போக வேண்டியிருக்கு. ஆனாலும், நாங்க யாரும் மனசு உடைஞ்சுபோகலை. நாங்க ஒண்ணு சேராம இருந்திருந்தா, சிலர் பிச்சைக்காரங்க ஆகியிருப்போம். சிலர் தற்கொலையே பண்ணியிருப்போம். ஒண்ணா சேர்ந்ததால், பிரச்னைகளை சமாளிச்சுப் போராடி நிற்கிறோம். இருக்கிற துன்பங்களையும் இதேபோல போராடி ஜெயிப்போம்!”

– ராமலட்சுமியின் வார்த்தைகள்தான் அவர்களின் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்கின்றன!

வாழ்க்கையின் ஒவ்வொரு அர்த்தங்களையும் தேடிக்கொண்ட, இவர்கள் நமக்கும் அர்த்தங்களை கொடுத்திருக்கிறார்கள்

source : http://www.vikatan.com/article.php?mid=1&sid=3&aid=12

Leave a comment

Share Your Thoughts...