Bharatiya Yuva Shakti Trust

| | posted on:Success Stories

பீகாரைச் சேர்ந்த அர்ஜுன்குமார் ஒரு மாற்றுத்திறனாளி. பிழைப்புத் தேடி புதுடெல்லி வந்தவருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. பிச்சை எடுக்கத் துவங்கினார். சுமார் ஓராண்டாக தொடர்ந்த இந்த அவலநிலை ‘பிஓய்எஸ்டி’ என்ற அறக்கட்டளையின் வழிகாட்டுதல் மற்றும் கடன் வசதியால் மாற, இன்று தொலைத்தொடர்பு வசதி மைய உரிமையாளர் என்றாகிவிட்டார் அர்ஜுன். அவரது வருட வியாபாரம் 12 லட்சத்துக்குக் குறைவதில்லை!

டெல்லியின் சராசரி குடும்பம் ஒன்றைச் சேர்ந்த நீத்தா ஜெயின். பட்டதாரியான இவர், வேலை தேடித் தேடியே ஒரு கட்டத்தில் நொந்து போனவர். இப்போது டெல்லியின் சிறு தொழில் அதிபர்களில் ஒருவர். பதினாறு ஆண்டுகளுக்கு முன் ‘பிஒய்எஸ்டி’-யிடம் 46,250 கடன் உதவி பெற்று, ஸ்டேஷனரி பொருட்கள் தயாரிக்கத் துவங்கியவரின் இன்றைய வருடாந்தர வியாபாரம் 29 லட்சத்துக்கும் மேல்!

இதுபோல் இந்தியா முழுவதும் சுமார் 2,300 சாதனையாளர்கள் உருவான கதைகள் உள்ளன. இவை அனைத்துக்கும் காரணகர்த்தா, ‘பிஒய்எஸ்டி’ எனப்படும் பாரத் யுவ சக்தி அறக்கட்டளையின் (BYST-Bharat Yuva Shakthi Trust) நிர்வாக டிரஸ்ட்டியான லஷ்மி வெங்கடேசன். இவர், முன்னாள் ஜனாதிபதியான காலம் சென்ற ஆர்.வெங்கட்ராமனின் மூன்றாவது மகள். டெல்லியில் அவருடைய அலுவலகத்தில் லஷ்மியைச் சந்தித்தோம்.

”நான் இந்தத் திட்டத்தை தொடங்க ரோல் மாடலாக இருந்தவர், பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ். என் தந்தை ஜனாதிபதியாக இருந்தபோது அவருடன் ஒரு முறை பக்கிங்ஹாம் அரண்மனைக்குச் சென்றேன். அந்த விருந்தின்போது, ‘பிரின்ஸ் டிரஸ்ட்’ என்ற பெயரில் தான் நடத்தும் அறக்கட்டளையின் சார்பில் புதிதாக தொழில் துவங்குவோருக்கு உதவி வருவதை என்னிடம் பகிர்ந்து கொண்டார் சார்லஸ். அப்போதே, ‘இதேபோல் ஒரு தொண்டு அமைப்பு, நம் நாட்டுக்கும் வேண்டும்’ என்ற விதை எனக்குள் விழுந்தது.

இன்று மிகப் பெரிய அளவில் உயர்ந்து இருக்கும் மைக்ரோசாஃப்ட், யாஹூ, கூகுள் போன்ற ஐ.டி. நிறுவனங்கள் எல்லாம்… ஒரு காலத்தில் மிகச்சிறிய அளவில் துவங்கியவைதான். கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திய இரண்டு இளைஞர்கள், கார் நிறுத்தும் அளவுக்கேயுள்ள ஓரிடத்தில் துவக்கியதுதான்… ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ். வெளிநாடுகளில் இதுபோன்ற முன் மாதிரிக் கதைகள் தொழில் துவங்குபவர்களுக்கு பிளாட்ஃபாரமாக இருக்கின்றன. இந்த நிலை இந்தியாவிலும் உருவாக வேண்டும் எனக் கருதினேன். இந்தியா திரும்பி, அதற்கான வேலைகளில் இறங்கினேன்” எனும் லஷ்மி, 14 ஆண்டுகளாக அமெரிக்காவில் கல்வி பயின்றதோடு, அங்கேயே பணியாற்றிய அனுபவங்கள் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

”என் நல்முயற்சிக்கு ஜே.ஆர்.டி.டாடா, ஹெச்.பி.நந்தா, ராகுல் பஜாஜ் போன்ற பெரிய தொழில் அதிபர்கள் மற்றும் சிறுதொழில் அதிபர்கள் உதவ முன் வந்தது, நம்பிக்கை தந்தது. அவர்களின் ஆலோசனைகளையும் ஏற்றுக்கொண்டு, 92-ல் ‘பாரத் யுவ சக்தி அறக்கட்டளை’ என்ற பெயரில் அதிகார பூர்வமாக தொண்டு அமைப்பைத் துவக்கினேன். அதன் செயலாற்றும் திறனைக் கண்டு வியந்த, ‘சிஐஐ’ (CII) என்றழைக்கப்படும் இந்தியத் தொழில் கூட்டமைப்பு, என் அமைப்புக்கு அங்கீகாரம் அளித்து, உதவிகளையும் செய்து வருகிறது” என்ற லஷ்மி, தன் அமைப்பின் செயல்பாடுகளை விளக்கினார்.

”தொழில் துவங்க உதவி கேட்டு வருபவர்களைக் கல்வித் தகுதியின் அடிப்படையில்  பரிசீலிப்பதில்லை; தொழில் தொடங்குவதற்கான திறமை, ஆர்வம் மற்றும் மன தைரியம் உள்ளவரா என்றுதான் முக்கியமாகப் பார்க்கிறோம். அதேபோல, திட்ட அறிக்கை, செக்யூரிட்டி என வங்கிகளின் வழிமுறைகள்போல் கடுமையாக இல்லாது, எளிமையான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து எங்களிடம் ஒப்படைத்தால் போதுமானது.

தொழிலுக்கு ஏற்றபடி ஐம்பதாயிரம் ரூபாய் வரை கடன் தந்து உதவுவதைத்தான் ஆரம்பத்தில் ஒரு அளவீடாக வைத்திருந்தோம். காரணம், எங்களிடம் உள்ள குறைவான தொகையை வைத்து, பலருக்கும் உதவ வேண்டி இருந்ததுதான். ஆனால், தற்போது இந்த நிதி உதவிக்கே தேவையில்லாமல் போனது, ஆக்கபூர்வமான மாற்றம். காரணம், நாங்கள் 15 ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருந்த ‘கிரெடிட் கேரன்டி ஸ்கீம்’, இப்போது அனைத்து வங்கிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டதால், அவர்களிடமே எங்கள் தொழில் முனைவோருக்கான நிதியை ஐம்பது லட்சம் ரூபாய் வரை வாங்கித் தந்து விடுகிறோம்” எனும்போது லஷ்மியின் கண்களில் நிறைவு!

”நிதி உதவி மட்டும் கொடுத்து விட்டால் போதாது. தொடர்ந்து ஆதரவு தர வேண்டும். அப்போதுதான் எதுவுமே வெற்றி பெறும். இந்த ‘ஃபாலோ அப்’ஐ நாங்கள் தருவதுதான் எங்கள் அமைப்பின் சிறப்பு. உதாரணமாக, கடன் பெற்ற ஒவ்வொரு நபருக்கும் ‘மென்ட்டார்'(Mentor)எனப்படும் வழிகாட்டியாக எங்கள் வாலன்டியர் ஒருவர் இருப்பார். மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் மென்ட்டாரும், தொழில்முனைவோரும் சந்தித்து தொழிலின் வளர்ச்சி பற்றி ஆலோசிப்பார்கள். இத்துடன் ஒரு தொழிலுக்கு முக்கியத் தேவையான ஆர்டர்க¬ளையும் எங்களிடம் உள்ள நெட்வொர்க் உதவியால் வாங்கித் தருகிறோம். அந்தத் தொழிலை வளர்க்க மேலும் தேவைப்படும் கடனுக்காக வங்கிகளில் பேசி பெற்றுத் தருகிறோம்”

– இப்படி வியக்க வைக்கும் வகையில் அந்த அமைப்பின் அக்கறையைப் பகிர்ந்தார் லஷ்மி.

”எங்கள் உதவியோடு வெற்றிகரமாக தொழில் துவங்கியவர்களில் நன்கு படித்தவர்களைவிட, குறைந்த கல்வித் தகுதியைக் கொண்டவர்களே அதிகம். எனவேதான் எங்கள் திட்டங்களைக் கிராமப்புறங்களிலும் துவங்கி விட்டோம். எங்களை அணுகிய 75 ஆயிரம் பேரில் இருந்து தகுதியான 2,300 பேருக்கு நிதி உதவி அளித்துள்ளோம். இதில் பத்து சதவிகிதத்தினர் இன்று மில்லியனர்களாக இருக்கிறார்கள். சுமார் 22 ஆயிரம் பேருக்கு இதனால் வேலை வாய்ப்புக் கிடைத்துள்ளது!” என்று ஆச்சர்ய புள்ளி விவரங்கள் தந்த லஷ்மி,

”தமிழ்நாட்டிலும் எங்களின் சேவை விரிந்துள்ளது. இதுவரை 615 பேருக்கு நிதி உதவியும், அதன் மூலம் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பும் அளித்துள்ளோம்!” என்றார் இந்தத் தமிழச்சி பெருமையாக!

லஷ்மி வெங்கடேசனின் உதவியோடு வெற்றி பெற்றவர்களில், சாம்பிளாக நாம் சந்தித்தது சென்னையைச் சேர்ந்த ராஜேஸ்வரியை. மிகக் குறைந்த அளவு தொகையை ‘பிஓய்எஸ்டி’ மூலம் கடனாகப் பெற்ற ராஜேஸ்வரி, இன்று ஆண்டுக்கு 42 லட்சம் டர்ன் ஓவர் செய்து கொண்டு இருக்கிறார். வடபழனியில் இருக்கிறது ராஜேஸ்வரியின் ‘அக்ஷரா பிரின்ட் ஃபார்ம் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனம்.

”அப்பா, அம்மா, நான், தங்கச்சி இதுதான் எங்க குடும்பம். ரொம்பவும் நடுத்தரமான குடும்பம்தான். அப்பாவுக்கு கம்ப்யூட்டர் பர்ச்சேஸ் மேனேஜர் வேலை. அதனாலேயே கம்ப்யூட்டரைக் கண்டா ஆச்சர்யமும், ஆர்வமும் இயல்பாவே வந்துருச்சு. பிளஸ் டூ முடிச்சுட்டு கரஸ்ல பி.காம். படிச்சுட்டு இருந்தேன். பார்ட் டைமா ஜாப் டைப்பிங் செய்தேன். அப்படியும் நிறைய நேரம் இருந்துச்சு. பிரின்ட்டர் ரீஃபிள் பண்றதுக்கு தேவை நிறைய இருக்குனு தெரிய வரவே, அதையும் செய்ய ஆரம்பிச்சேன்.

நல்லி, குமரன் சில்க்ஸ்னு கடைக்காரங்ககிட்ட ரீஃபிள் பண்ணி தர்றேனு ஆர்டர் கேட்டேன். அப்ப எனக்கு 17, 18 வயசு இருக்கும். என்னைப் பார்த்துட்டு தயங்கினாலும், என்னோட பேச்சையும்… அதுல இருந்த உறுதியையும் பார்த்துட்டு… ஆர்டர் தந்தாங்க. மாசம் மூவாயிரம் ரூபா இதுலயே சம்பாதிக்க ஆரம்பிச்சேன்… இருபது வருஷத்துக்கு முன்ன” என்று ஆச்சர்யம் விலகாதவராக சொன்ன ராஜேஸ்வரி,

”இடையில, அப்பாவோட ஃப்ரெண்ட் சடகோபன், மூலமா ‘பிஒய்எஸ்டி’ பத்தி கேள்விப்பட்டு, தொடர்பு கொண்டேன். எனக்கு ‘மென்ட்டாரா’ ஆனந்தன்கிறவரை நியமிச்சாங்க. பிறகுதான், ரீஃபிள் பண்ற வேலையை ஒரு பிஸினஸாவே பெரிய அளவுல நடத்த ஆரம்பிச்சேன். கையில இருந்த முப்பதாயிரம் ரூபாய், ‘பிஒய்எஸ்டி’ கொடுத்த இருபதாயிரம் ரூபாய் ரெண்டையும் சேர்த்து, தி.நகர்ல 95-ம் வருஷம் சின்ன அளவில துவக்கினேன். கம்ப்யூட்டர் சேல்ஸ் கம் சர்வீஸ்கூட பண்ணி கொடுக்க ஆரம்பிச்சேன்.

ஆரம்பத்துலயே மரண அடி. நாங்க சப்ளை பண்ணின கம்பெனிக்கு பயங்கர நஷ்டம் வந்ததால, எட்டு லட்ச ரூபாயை கைவிரிச்சுட்டாங்க. ரொம்பவே தடுமாறினாலும், பிஸினஸுக்கு எதுவும் ஆகிடக்கூடாதுனு பேங்க் லோன் எல்லாம் போட்டு சமாளிச்சேன்.

தங்கச்சி மகாலட்சுமி எம்.சி.ஏ. முடிச்சுட்டு, கம்ப்யூட்டர் அசெம்பிள் பண்றது பத்தி படிச்சுட்டு இருந்தா. அதனால, கம்ப்யூட்டர் அசெம்பிளிங்கும் செய்து கொடுக்க ஆரம்பிச்சோம். 2000-ம் வருஷம் ‘பிஒய்எஸ்டி’ அமைப்போட குரோத் ஃபண்ட் ஸ்கீம் மூலமா கம்ப்யூட்டர் பேப்பர் தயாரிக்கிற மெஷின் வாங்கினோம். இப்ப கம்ப்யூட்டர் பேப்பர், ஆப்செட், ஸ்கிரின் பிரின்ட்டிங், கம்ப்யூட்டர் சேல்ஸ் அண்ட் சர்வீஸ்னு நானும் என் தங்கச்சியும் செய்துட்டு வர்றோம்’’ என்பவரின் கடந்த ஆண்டு டர்ன் ஓவர்… 42 லட்சம்!

இவருடைய அபார வளர்ச்சியைப் பார்த்து 2000-ம் வருடம், ‘ஜே.ஆர்.டி. டாடா சிறந்த தொழில் அதிபர் விருது’ இவருக்குக் கிடைத்துள்ளது. ரகுநாத் என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் காதலித்து கரம் பிடித்திருக்கிறார்.

After the successful launch of the pilot programme, BYST expanded its operations to Chennai in 1992. CII, Chennai provided the infrastructure and managerial support to the programme. Presently BYST – Chennai is operating from:
Address:
Bharatiya Yuva Shakti Trust
C/o, Confederation of Indian Industry (CII)
98/1, Velachery Main Road
Guindy
Chennai – 600042.
Tel : 044-42444521 (AVK) , 044-42444505 (telefax), 044-42444555 (Cii Board Line)
e-mail: byst.chennai@cii.in
Contact Person: Mr. Dilli Babu