அன்புக்கு ஆசைப்பட்டேன் - குமார் - enabled.in

அன்புக்கு ஆசைப்பட்டேன் – குமார்

‘நான் குமார். எனக்கு, குளித்தலை பக்கத்துல வலையபட்டி கிராமம். ஒரு தீ விபத்துல என் வலது கை விரல்கள் கருகி, நரம்புகள் பின்னிக்கிருச்சு. இப்போ என் வலது கை இயல்பா இயங்காது. அந்த விபத்துல இருந்தே கிட்டத்தட்ட நடைப் பிணமாத்தான் நடமாடிட்டு இருந்தேன். அப்போ, டி.வி-யில் டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸ் குரூப்பைச் சேர்ந்த, மாற்றுத் திறனாளி இளைஞர்களின் டான்ஸ் ஷோ பார்த்தேன். நம்பவே முடியாத டான்ஸ். என்னைவிட, ஊனத்தின் அளவு அதிகம் உள்ள இளைஞர்கள் அவ்வளவு உற்சாகமா ஆடினாங்க. ‘வாழ்க்கையே முடிஞ்சுபோச்சு’ன்னு நினைச்சுட்டு இருந்த எனக்குள் புது நம்பிக்கையை உண்டாக்கிட்டாங்க.


லாரன்ஸிடம் சம்மதம் வாங்கி குமாரை சென்னைக்கு வரவழைத்தோம். அசோக் நகரில் உள்ள லாரன்ஸின் டிரஸ்ட் அலுவலகம் அது. ஆதரவற்ற குழந்தைகள், சிறுவர்-சிறுமியர், மாற்றுத் திறன்கொண்ட இளைஞர்கள் என மினி உலகம் அது.

குமாரின் கூச்சம் களையும் வகையில் கலகலவெனப் பேசி அவரை சகஜமாக்கினார் லாரன்ஸ். ”இங்கே உள்ளவங்களோட ஒப்பிட்டா, என் ஊனம் ரொம்ப சின்னதுதான் மாஸ்டர். ஆனா, அதுக்கே நான் சந்திச்ச அவமானங்கள் அதிகம். பசங்களோட சாதாரணமா பேசிட்டு இருக்கிறப்பவே, ‘போடா நொண்டிப் பயலே’ன்னு எகத்தாளமா சிரிப்பாங்க. அப்பப்போ, சித்தாள் வேலைக்குப் போவேன். சமயங்கள்ல பிடிமானம் தவறி மண் வெட்டி விழுந்துட்டா, ‘இவனை எதுக்கு வேலைக்கு அழைச்சுட்டு வர்றீங்க’ன்னு என் காதுபடவே பேசுவாங்க. அதான் எனக்கே என்னைப் பிடிக்காமப்போச்சு!” என்ற குமாரை மேற்கொண்டு தொடரவிடாமல், இடைமறித்தார் லாரன்ஸ்.

”முதல்ல உங்களை நீங்களே குறைச்சு மதிப்பிடுவதை நிறுத்துங்க. ‘நான் இயல்பானவன். என்னால் எதையும் சாதிக்க முடியும்’னு பாசிட்டிவ்வா யோசிங்க குமார்!” என்று அணைத்துக்கொண்டவர், டிரஸ்ட்டின் மேலாளர் தனசீலனிடம், ”ராஜ கோபாலை அழைச்சுட்டு வாங்க!” என்றார். ”அவர் கடைல இருப்பாரே” என்று தனசீலன் சொல்ல, ”பரவாயில்லை… கூட்டிட்டு வாங்க!” என்றார் லாரன்ஸ்.

”சின்ன வயசுல எனக்கு ப்ரைன் ட்யூமர். ரொம்ப சிரமப்பட்டு தான் அதுல இருந்து மீண்டு வந்தேன். நாம பட்ட கஷ்டத்தை மத்தவங்க படக் கூடாதுன்னு அப்போ நினைச்சேன் குமார். மனசு இருந்துச்சே தவிர, அதைச் சாத்தியப்படுத்துவதற்கான வயசோ, வசதியோ அப்போ இல்லை. வசதி வந்ததும், என் ஆசைக்கு இந்த டிரஸ்ட் மூலமா உயிர் கொடுத்தேன்!” என்று லாரன்ஸ் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, மாடிப் படிகளில் தவழ்ந்து ஏறி வந்தார் ஓர் இளைஞர். உடனே எழுந்து சென்று அவரைக் கைத்தாங்கலாக அழைத்து வந்தார் லாரன்ஸ்.

”இவர் ராஜகோபால். மனசு சிந்திக்கும் வேகத்துக்கு இவருடைய உடம்பு ஈடுகொடுக்காது. தெளிவாப் பேச முடியாது. நடக்கும்போதே கால்கள் உதறும். இவ்வளவு இருந்தாலும், தன்னம்பிக்கையில் தம்பியை யாரும் அசைச்சுக்க முடியாது. ‘என்ன ராஜகோபால், நான் சொல்றது சரிதானே?’ ” என்று லாரன்ஸ் கேட்க, சிறிது நேரப் போராட்டத்துக்குப் பிறகு, ராஜகோபாலிடம் இருந்து ”தேங்க்யூ மாஸ்டர்!” என்று வெளிப்படுகின்றன தெளிவில்லாத வார்த்தைகள்!

”கடைல இருக்காருன்னு சொன்னீங்க… ராஜகோபால் எங்க வேலை செய்றாரு?” என்று கேட்டார் குமார். ”பக்கத்துலயே சாருக்கு ஒரு பெட்டிக் கடை வெச்சுக் கொடுத்திருக்கோம். அந்த வருமானத்தை அப்படியே ஊருக்கு அனுப்பிடுவாரு. இவரை ஏன் அழைச்சுட்டு வரச் சொன்னேன் தெரியுமா? ராஜகோபால் காலாலயே படம் வரைவார். அவர் படம் வரை வதைப் பார்த்தா, உங்களுக்கே ஒரு உத்வேகம் பிறக்கும்!” என்றவர், ”ராஜகோபால்… சிரமம் பார்க்காம குமார் சாருக்காக ஏதாவது வரைஞ்சி காமிங்களேன்!” என்று கேட்டுக்கொண்டார்.

ஒரு காலால் பேப்பரை அழுத்திப் பிடித்தபடி, இன்னொரு காலின் விரல்களால் ஸ்கெட்ச் பென்சிலைப் பிடித்து வரையத் தொடங்கினார் ராஜகோபால். சில நிமிடங்களில் ராகவேந்திரர் ஓவியம் தத்ரூபமாகத் தாளில் புன்னகைத்தது. விரிந்த விழிகளும் வியப்புப் புன்னகையுமாக அதைக் கவனித்துக்கொண்டு இருந்த குமார், வரைந்து முடித்ததும் ராஜகோபாலைத் தோளோடு அணைத்து இறுக்கிக்கொண்டார்.

”ஒருநாள் கார்ல போயிட்டு இருக்கும்போது, கமலா தியேட்டர் பஸ் ஸ்டாண்ட் பக்கம் ஒரு பையன் போலியோ பாதிச்ச கால்களால் நிற்கவோ, நடக்கவோ முடியாமத் தவிச்சுட்டு இருந்தார். காரை அவர் பக்கத்துல நிறுத்தி விசாரிச்சேன். தன் பேர் மணிகண்டன்னு சொன்னவர், ‘ப்ளஸ் டூ-ல நல்ல மார்க் எடுத்தும் மேல படிக்க வசதி இல்லை. ஏதாவது வேலை செஞ்சு பொழைச்சுக்கலாம்னு சென்னைக்கு வந்தேன். எந்த வேலையும் கிடைக்கலை’ன்னு அழாத குறையாச் சொன்னார். ‘இவங்களுக்குப் பண உதவியைவிட, மனரீதியான அன்புதான் தேவை’ன்னு தோணுச்சு. அதுக்கு மேல தள்ளிப் போடக் கூடாதுன்னுதான் உடனே ‘லாரன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட்’ ஆரம்பிச்சுட்டேன். மணிகண்டன்தான் இந்த டிரஸ்ட்டின் முதல் உறுப்பினர். இப்ப அவர் பி.சி.ஏ., படிச்சுட்டே ஒரு தனியார் நிறுவனத்தில் பகுதி நேரமா வேலை பார்க்கிறார். இங்கே உள்ளே 108 குழந்தைகளில், 48 பேர் மாற்றுத் திறனாளிகள். அவங்க எல்லோரும் ஏதோ ஒரு வேலைக்குப் போறாங்க. குறைஞ்சது ஆயிரம் ரூபாய்ல இருந்து ஐயாயிரம் ரூபாய் வரை அவங்க வீட்டுக்கு மாசாமாசம் அனுப்புறாங்க.  நம்பிக்கை வார்த்தைகளும் ஆறுதல் அரவ ணைப்பும்தான் என்னால் அவங்களுக்குக் கொடுக்க முடிஞ்சது!” என்று புன்னகைக்கிறார் லாரன்ஸ்.

இதற்குள் பள்ளிக்குச் சென்று இருந்த மற்ற குழந்தைகளும் வந்து சேர்ந்துகொள்ள… அவர் களுக்கு குமாரை அறிமுகப்படுத்தினார் லாரன்ஸ். அவர்களுடன் உரையாடி, விளையாடி மகிழ்ந்தார் குமார். முழுதாக இரண்டு மணி நேரம் அந்தக் குழந்தைகளுடன் உற்சாகமாகச் செலவழித்த குமாரின் முகம் முழுக்க புன்னகைப் பூரிப்பு. ” ‘இனிமே வாழ்க்கையே இல்லை’ன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா, ‘இனிமேதான் வாழ்க்கையே இருக்கு’ன்னு புரியவெச்சுட்டீங்க. ரொம்ப நன்றி சார்!” என்று லாரன்ஸின் கைகளைப் பிடித்துக்கொண்டார் குமார்.

விடைபெறும் சமயம், ஏனோ தயங்கி நின்றார் குமார். ”என்ன குமார்… என்ன விஷயம்?” என்று லாரன்ஸ் கேட்க, தயக்கத்தோடு தனது சட்டைப் பையில் இருந்து 500 நோட்டு ஒன்றினை எடுத்து, ”தப்பா நினைக்காதீங்க சார்… என்னால முடிஞ்ச ஒரு சின்ன உதவி!” என்று லாரன்ஸிடம் பணத்தை நீட்டினார் குமார். அறையில் ஒரு கணம் பலத்த அமைதி. சட்டென்று ஒரு குழந்தை கை தட்ட, தொடர்ந்து அனைவரும் படபடவெனக் கை தட்ட… அறை முழுக்க மகிழ்ச்சி அலை. நெகிழ்வும் மகிழ்வுமாக, குமாரிடம் இருந்து அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்ட லாரன்ஸ், நினைவுப் பரிசுகளுடன் அவரை வழியனுப்பினார்.

வீதி திரும்பும் வரை தங்களது புது நண்பருக்கு ‘டாட்டா’ காட்டிக்கொண்டு இருந்தார்கள் அந்தக் குழந்தைகள்!

Source : http://www.vikatan.com/article.php?mid=1&sid=140&aid=4915

Leave a comment

Share Your Thoughts...