ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உடையநாதபுரத்தை சேர்ந்தவர் சப்பாணி(33). மாற்றுத்திறனாளியான இவருக்கு, பிறவியிலிருந்தே நடக்க முடியாத நிலை. பெற்றோரும் செவித்திறன் குறைவுடையோர் ஆவர். கிராமப்பகுதியில் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் வழக்கமான தொல்லைகள் இவருக்கும் இருந்தது. இதனால் இவரது பொழுதுகள் பெரும்பாலும் கிராமத்தை கடந்தே நகர்ந்து வந்தன. அருகில் உள்ள எழுதூர்பாட்டி கண்மாய் பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் நிறைய கருவேலமரங்கள் வளர்ந்திருந்தன. இதுவே சப்பாணியின் பொழுதுபோக்கு மையமாக இருந்தது. இங்கு வரும் மயில்களை கண்டு ரசிப்பதும், விளையாடுவதுமாக பொழுதை கடத்தி வந்தார். இங்குள்ள கருவேல மரங்களால் தான், மயில்கள் வருகின்றன, என்பதை உணர்ந்து தொடர்ந்து அவற்றை யாரும் வெட்டாத படி, கடந்த 23 ஆண்டுகளாக அங்குள்ள கருவேல மரங்களை காக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
தனது 10 வயதில் தொடங்கிய இந்த பணிக்காக, வீட்டை விட அதிக நேரம் இங்கு தான் செலவிட்டுள்ளார். சப்பாணி இல்லாத நாளில், உடையநாதபுரத்தை சேர்ந்த நபர் ஒருவர், மூன்று லோடுகளுக்கு மேல் கருவேலமரங்களை வெட்டி கடத்தினார். இதனால் அப்பகுதியில் மயில் நடமாட்டம் கணிசமாக குறைந்தது. கடத்தல்காரர்கள் மேலும் அங்கு வர வாய்ப்புள்ளதால், “அங்குள்ள அரசு சொத்தை காக்குமாறு,’ அப்பகுதியின் வருவாய் துறையினரிடம் புகார் செய்த போது, யாரும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. தொடர்ந்து முறையிட்டும் பிரயோஜனம் இல்லாததால், ராமநாதபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சப்பாணி புகார் தெரிவித்தார்.
சப்பாணி கூறியதாவது: அரசு சொத்தை கடந்த 23 ஆண்டுகளாக பாதுகாத்து வந்த நிலையில், அது கொள்ளை போனது குறித்து யாரும் கண்டுகொள்ள மறுக்கின்றனர். குறிப்பிட்ட அளவு கருவேலமரங்களை வெட்டியதால் மயில்கள் நடமாட்டம் குறைந்து விட்டது. மயில்களை காப்பாற்றவும், அரசு சொத்தை மீட்கவும் அலைந்து வருகிறேன் என்கிறார்.
எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் என்றும் தடையில்லை