ஆசியாவின் ஒரே அரசுக் கல்லூரி - enabled.in

ஆசியாவின் ஒரே அரசுக் கல்லூரி

சென்னை மாநிலக் கல்லூரி. காது கேளாத, வாய்ப் பேச முடியாத மாற்றுத் திறனாளி மாணவர்களுக்குப் பட்டப் படிப்பை வழங்கிக்கொண்டு இருக்கும் ஆசியாவின் ஒரே அரசுக் கல்லூரி இதுதான். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குத் தனி வகுப்பறைதானே தவிர, பொது மாணவர்களுக்கான சிலபஸ்தான் படிக்க வேண்டும்.

‘பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ. துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பை வழங்குகிறோம். சிறப்பு மாணவர்களுக்கான இந்தப் பிரிவுகள், 2007-ம் ஆண்டு சமூக நலத் துறையால் துவங்கப்பட்டது.  ஏகப்பட்ட வசதிகளுடன் இயங் கும் தனியார்ப் பள்ளிகளைவிட நாங்கள் இவர்களுக்குத் தரமான கல்வியை வழங்குகிறோம். பொது நலத்தோடு இயங்கும் பேராசிரியர்களும், முன்னேறத் துடிக்கும் மாணவர்களுமே இதற்குக் காரணம். இங்குப் படித்த பலர் பெரிய நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர் என்பது எங்களுக்குப் பெருமை.” – என மகிழ்கிறார் மாநிலக் கல்லூரியின் முதல்வர் ரகுராமன்.

‘தனியார் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படிக்க வேண்டும் என்றால் வருஷத்துக்கு 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம்  வரைக்கும் கட்டணம் செலுத் தணும். ஆனால், இங்கே வருஷத் துக்கு 800  மட்டுமே கட்டணம். இதைக் கட்டுவதுக்கும் அரசு ஸ்காலர்ஷிப் கொடுக்குது. இதனால் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இங்கே படிக்க விரும்புறாங்க. தகுதியின் அடிப்படையில் ஒவ்வொரு துறையிலும் 15 பேரை மட்டுமே தேர்வுசெய்கிறோம்” என்கிறார் வணிகவியல் துறைத் தலைவர் பேராசிரியர் ராமன்.

மாணவர்களுக்கு‌ அரைவட்ட வடிவில் ஆன வகுப்பறைச் சூழலை அமைத்துத் தர வேண்டும் என்பது இங்கு உள்ள பேராசிரியர்களின் நீண்டகால கோரிக்கை. இதுகுறித்து உதவி விரிவுரையாளர் முகேஷ்தேவன் குறிப்பிடுகையில், ”செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்காக ஸ்பெஷல் வகுப்பறையை அமைத்துத் தர வேண்டும்.  மாலை நேர வகுப்புகளை மாற்றி காலையில் ரெகுலர் வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அரசிடம் கோரிக்கைவைத்து உள்ளோம்!’ என்கிறார்.

‘இவர்களில் பலர் பொது மாணவர்களுடன் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வாங்கி இருக்கிறார்கள். மஞ்சுளா என்ற மாணவி, தடகளப் போட்டிகளில் கல்லூரியிலேயே முதலாவதாக வந்து உள்ளார். தேசிய அளவிலான ‘செஸ்’ போட்டிகளில் வென்ற கலைச்செல்வி, படிப்பில் முதல் மாணவியான சுபாஷினினு இங்கு ஏகப்பட்ட சாதனையாளர்கள் இருக்கிறார்கள்” என்கிறார் மற்றொரு உதவி விரிவுரையாளர் பிலிப்.

மாணவர்கள் பக்கம் திரும்பியதும், இரு கைகளையும் மேலே உயர்த்தி அசைத்து நம்மை வரவேற்றனர். ”நல்லா படிக்கிறோம். பெரிய நிலைமைக்குப் போவோம்னு நம்பிக்கை இருக்கு. சின்னச் சின்ன பிரச்னைக்கு எல்லாம் வாழ்க்கையில் சோர்ந்துபோறவங்களை இங்கே அழைச்சுட்டு வாங்க சார். எங்க பிரச்னைகளை சொன்னாலே போதும். எங்க எனர்ஜி அவங்களுக்கும் தொத்திக்கும்!” – என்று சவால்விடும் ஒரு மாணவரின் உடல்மொழியை நமக்காக மொழிபெயர்த்தார் ஒரு பேராசிரியர். வாழ்த்துகள் சொல்லி விடைபெற்றோம்.


source : http://www.vikatan.com/article.php?mid=10&sid=290&aid=10568

Leave a comment

Share Your Thoughts...