ஜெயிப்பதற்கு நம்பிக்கையும், உழைப்பும் மட்டும் இருந்தால் போதும். கடவுள் இதைவிட மோசமாக என்னைப் படைத்து இருந்தாலும், நான் ஜெயித்து இருப்பேன்!” – விஜயகுமாரிடம் பேசும் போதே நமக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது.
மாற்றுத் திறனாளியான விஜயகுமார் கடந்த நான்கு ஆண்டுகளாக ‘மிஸ்டர். சேலம்’ போட்டியில் சாம்பியன்! சொந்த ஊர் சேலம் மாவட்டம், வனவாசி. ”எனது கால்கள் இளம்பிள்ளைவாதத் தால் பாதிக்கப்பட்டதால், அதற்கான ஷூ போட்டால்தான் என்னால் நகர முடியும். ‘மற்றவர்கள்போல் என்னால் நடக்க முடியாது’ என்ற உண்மை உறைத்தது. உறைந்துபோனேன். ஆனால், எல்லாம் கொஞ்ச காலம் தான்.
கால்களில்தானே பிரச்னை… கைகளும், உடலும், மனமும் உறுதியாக இருக்கிறதே என்று விடாப்பிடியாக உடற்பயிற்சிகளைச் செய்தேன். இப்போது நான் ஆணழகன்!” என்கிற விஜயகுமார் தையற்கடையில் வேலை செய்து, தனது பெற்றோரையும் பராமரிக்கிறார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக மாற்றுத் திறனாளிப் பிரிவு ஆணழகன் போட்டியில் தொடர்ந்து முதல் பரிசைப் பெற்று வரும் விஜயகுமாரின் லட்சியம்… மிஸ்டர் தமிழ்நாடு!
Source : http://www.vikatan.com/article.php?mid=1&sid=80&aid=2863