பார்வையற்ற மாற்றுத்திறனாளி செல்வன் சாய்கிருஷ்ணா கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ள பார்வையற்றோருக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையினை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.
சென்னையைச் சேர்ந்த 15 வயது பார்வையற்ற மாற்றுத்திறனாளி செல்வன் சாய்கிருஷ்ணா அனைத்திந்திய பார்வையற்றோர் சதுரங்க சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு பார்வையற்றோர் சதுரங்கக் கழகத்தின் மூலம் நடைபெற்ற போட்டிகளில் பல பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
மேலும், கிரான்ட் மாஸ்டர் ஆகவேண்டுமென்பது தமது லட்சியம் என விளையாடி வருவதாகவும் 28.8.2011 முதல் 4.9.2011 வரை கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ள பார்வையற்றோருக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்கு அனைத்திந்திய பார்வையற்றோர் சதுரங்க சம்மேளனம் மூலம் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அப்போட்டியில் கலந்து கொள்வதற்கு தேவையான நிதியுதவினை அளிக்குமாறும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை மனுவினை அளித்திருந்தார்.
அவரது கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்த முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், பார்வையற்ற மாற்றுத்திறனாளி செல்வன் சாய்கிருஷ்ணா கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ள பார்வையற்றோருக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கி வாழ்த்தினார்.
மேலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான செல்வன் சாய்கிருஷ்ணாவின் தன்னம்பிக்கையைப் பாராட்டி, அவர் கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ள பார்வையற்றோருக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி வாகை சூடி தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்ற தனது அவாவினையும் தெரிவித்தார்.