உடலில் சிறு ஊனம் இருந்தாலே, விதியை நொந்தபடி முடங்கிக் கிடப்பவர்கள் பலர். ஆனால், ”இரு கைகளையும் இழந்த ஒருவர், இரண்டு சக்கர வாகனம் தொடங்கி, டிராக்டர் வரை ஓட்டுகிறார். ஏழையாக இருந்தாலும் அவருக்கு இருக்கும் மன தைரியத்தைப் பார்த்தால், ஹெலிகாப்டரைக் கொடுத்தால்கூட ஓட்டுவார் போல இருக்கிறது…’
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ள கொசப்பாடி மலை அடிவாரத்தில் ஒரு குடிசை வீட்டில் வசிக்கிறார் கு.அழகேசன்.
”நாங்க கஷ்டப்படுற ஏழைக் குடும்பம். எங்கய்யா குமரவேல், அம்மா மண்ணாங்கட்டி, அண்ணன், அக்கா எல்லோருமே வயல் வேலைக்குப் போவோம். நானும் சின்ன வயசில் இருந்தே பள்ளிக்கூடம் போயிட்டு வந்து, சாயங்கால நேரத்துல வேலைக்கும் போயிடுவேன். 1997-ம் வருடம்தான் விபத்து நடந்தது. அப்போ நான் 8-ம் வகுப்பு படிச்சேன். சாயங்கால நேரத்துல, வெல்லம் தயார் பண்றதுக்காக கரும்புச் சாறு எடுக்கும் கிரஷர் மெஷின்ல எடுபிடி வேலை பார்த்தேன். எப்பவும் போல வேலை பார்த்துக்கிட்டு இருந்தப்போ, எதிர்பாராத விதமா அந்த மெஷின்ல என்னோட கை இரண்டும் மாட்டிக்கிட்டு, முழங்கைக்குக் கீழே கட்டாயிடுச்சி. அன்னிக்கு நான் கத்துன கதறல்ல ஊரே கூடியிருச்சு. உயிர் போகிற மாதிரி வலிச்சது. அதுக்கப்புறம் ஆறு மாசம் ஆஸ்பத்திரியில இருந்தேன். குணமாகி வீட்டுக்கு வந்தப்புறமும், கிட்டத்தட்ட மூணு மாசம் பித்துப்பிடிச்சாப்ல கிடந்தேன்.
கஷ்டப்படுற என்னோட குடும்பத்துக்கு எதுவும் செய்ய முடியலையேன்னு வேதனைப்பட்டேன். அதனால ஏதாவது வேலை செஞ்சு சம்பாதிக்க நினைச்சேன். முதல்ல சைக்கிள் ஓட்டிப் பாத்தேன், ஆரம்பத்துல ரொம்பவும் கஷ்டமா இருந்து. கீழே விழுந்து அடிபட்டேன். ‘நொண்டிப்பயலுக்கு ஆசையைப் பாரு’ன்னு நிறையப்பேரு கிண்டல் செஞ்சாங்க. ஆனாலும் நான் அதைப் பத்தியெல்லாம் கவலைப்படாம கஷ்டப்பட்டுக் கீழே விழுந்து எழுந்து பழகிட்டேன். அப்புறமா டூ வீலர் ஓட்டப் பழகினேன். அப்புறம்தான் என்னால எதையும் செய்ய முடியும்ங்ற நம்பிக்கை வந்துச்சி.
எங்க மாமா வயலில் வேலை நடந்ததைப் பாத்துக்கப் போனேன். அப்போ, அவர் டிராக்டர் ஓட்டினதைப் பார்த்து, எனக்கும் கத்துத்தரச் சொல்லிக் கேட்டேன். அவரும் எனக்காக நிதானமா சொல்லிக் கொடுத்தார். ஆறு மாசத்துல நல்லாவே கத்துக்கிட்டேன்…” என்றவர் மனைவி, குழந்தைகளைக் கூப்பிட்டு அறிமுகம் செய்து வைத்தார்.
”எனக்கே என் மேல நம்பிக்கை இல்லாதப்ப, என்னை முழு மனசா ஏத்துக்கச் சம்மதிச்சா இந்த செல்வி. இவளைப் பார்க்கிற வரைக்கும், எனக்கு கல்யாணம் முடியுங்கிற நம்பிக்கையே இல்லை. என்னையும் ஒரு குழந்தை போல பார்த்துகிறா… இப்போ எங்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தாச்சு. கால் வயிற்றுக் கஞ்சி குடிச்சாலும், சந்தோஷமா வாழ்ந்துட்டு வர்றோம்!” என்றவர் நம்மை அழைத்துச் சென்று டிராக்டரை ஓட்டிக் காட்டினார். பாதியளவு கைகளே இருந்தாலும், டிராக்டரை மிகவும் அநாயாசமாக இயக்குவதும், நினைத்த திசையில் எல்லாம் திருப்புவதுமாக அசத்துகிறார். இரண்டு வயல்களுக்கு இடையில் இருக்கும் ‘வரப்பு’ என்கிற ஒத்தையடிப் பாதையில் இரு சக்கர வாகனத்தை கொஞ்சமும் சிரமம் இல்லாமல் ஓட்டுகிறார்.
டிராக்டர் ஓட்டுவதைத் தொழிலாக வைத்திருந்தாலும், பெற்றோருக்குச் சொந்தமான சிறு நிலத்தில் விவசாயமும் செய்து வருகிறார்.
Source : http://www.vikatan.com/article.php?mid=2&sid=58&aid=1916