சக்கர நாற்காலியில் சுழன்றபடி அந்த வளைக்கரம் அனாயசமாக வாளை வீச, பார்க்கும் நமக்கோ பிரமிப்பு. வாளின் வேகம் காற்றைக் கிழித்து கொண்டு பாய்ந்தது. வளைக்கரம் வாள் வீசுவது புதிதா என்ன? இல்லை. ஆனால் இந்த வளைக்கரத்துக்குச் சொந்தமான இந்திரா- மாற்றுத் திறனாளி என்பதுதான் புதிது. இவர் தேசிய, சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களைப் பெற்றுள்ளார். சாதிக்கத் துடிக்கும் இளைய சமுதாயத்தினருக்கு உதாரணமாய்த் திகழ்ந்து வரும் இந்திராவை அவரது கடினமான பயிற்சியின்போது சென்னை நேரு உள்விளையாட்டரங்கத்தில் சந்தித்தோம்.
உங்களைப் பற்றி…
திருச்சி எனது சொந்த ஊர். எனது அப்பா ஜெயபிரகாஷ், பிளாஸ்டிக் வியாபாரம் செய்து வருகிறார். உடன் பிறந்தவர்கள் 6 பேர். எனக்கு 5-ம் வயதில் போலியோவினால் பாதிக்கப்பட்டு ஒரு கால் செயல் இழந்தது. எனது ஊனத்தைவிட மற்றவர்கள் என்னிடம் காட்டிய பரிதாபம்தான் என்னை மிகவும் காயப்படுத்தியது. முயன்று பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்தேன்.
விளையாட்டில் ஆர்வம் வந்தது எப்படி?
திருச்சி மாற்றுத் திறனாளிகள் சங்கத்தில் பதிவு செய்து உறுப்பினராக இருந்தேன். அப்போது எனது நண்பர்கள் சிலரின் வழிகாட்டுதலால், மாற்றுத் திறனாளிகளுக்கென்று விளையாட்டுகள் உள்ளன என்று தெரிந்து கொண்டேன். அதனால் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால் எந்த விளையாட்டைத் தெரிவு செய்வது என்று தெரியவில்லை. சங்கத்தின் வழிகாட்டுதலால் சென்னையில் உள்ள சக்கர நாற்காலி வாள் சண்டை வீரர்கள் சங்கத்தில் 2006-ம் ஆண்டு இணைந்து பயிற்சி பெற ஆரம்பித்தேன்.
உங்கள் முடிவை பெற்றோர் ஆதரித்தார்களா?
மாற்றுத் திறனாளியான நான் விளையாட்டில் ஈடுபடுவதை பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் எந்தவித திட்டமிடலும் இல்லாமல், வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்தேன். பெண்கள் விடுதியில் தங்கி, பயிற்சியைத் தொடரலாம் என்றால் பணத்துக்கு என்ன செய்வது என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில், சென்னையில் உள்ள சித்தி என்னை ஆதரித்தார். என் சித்தி மகள் வைஷ்ணவி, தான் பார்த்துக் கொண்டிருந்த தொழிலையும் விட்டுவிட்டு எனக்கு உதவியாக இருந்து வருகிறாள்.
நீங்கள் சந்தித்த சவால்கள்…
இவள் என்ன சாதிக்கப் போகிறாள் என்று ஏளனப் படுத்தியது இந்த சமூகம். அதனால் எனக்கு முன்பே என் தங்கைக்கு திருமணம் செய்யப்பட்டது. இவர்களின் ஏளனத்தையே என் முன்னேற்றத்துக்கு படிக் கற்களாக்கிக் கொண்டேன்.
வெற்றிக் கனியை உடனே பறிக்க முடிந்ததா?
2006-ம் ஆண்டு சில மாத பயிற்சிக்குப் பின்னர் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் பங்கேற்றேன். அதைத் தொடர்ந்து தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றேன். என்னுடைய சாதனையைப் பார்த்தவுடன் என்னைக் குடும்பத்தினர் ஊக்குவித்தனர். ஆனால் அவர்களால் பொருளாதார ரீதியாக உதவ முடியாத நிலை. இதனால் “ஸ்பான்ஸர்கள்” மூலமாகவே போட்டிகளில் பங்கேற்று வருகிறேன்.
உங்கள் சாதனைகளைப் பற்றி..?
இந்த நான்கு ஆண்டுகளில் சர்வதேச அளவில் 5 பதக்கங்களைப் பெற்றுள்ளேன். தேசிய அளவில் சுமார் 26 பதக்கங்களைப் பெற்றுள்ளேன். இந்திய அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி வாள் சண்டையில் பங்கேற்கும் ஒரே பெண்ணும் நான்தான். வாள் சண்டை தவிர்த்து சக்கர நாற்காலி தொடர் ஓட்டம், சக்கர நாற்காலி ஓட்டப் பந்தயம், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய விளையாட்டுகளிலும் தங்கம், வெள்ளி எனப் பதக்கங்களைப் பெற்றுள்ளேன். வாள் சண்டையின் மீது அதிக ஆர்வம் இருப்பதால், மற்ற விளையாட்டுகளில் அவ்வப்போதுதான் பங்கேற்று வருகிறேன்.
தடைக் கற்கள் என்று நீங்கள் நினைப்பது..?
பணம் ஒன்றுதான் எனக்குத் தடை. வீட்டாருக்கு ஊக்குவிக்க மனம் உள்ள அளவுக்கு பணம் இல்லை. தமிழக அரசு நான் பங்கேற்கும் போட்டிகளுக்கு சென்று வரும் பயணச் செலவுகளை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் விளையாட்டுக்குத் தேவையான ஆடை, வாள் உள்ளிட்டவற்றை வாங்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறேன். சீன நாட்டில் உருவாக்கப்பட்ட தரம் குறைந்த வாள்களை வைத்தே பயிற்சி பெறுகிறேன்.
அடைய நினைக்கும் இலக்கு..?
எல்லா வீரர்களைப் போன்று ஒலிம்பிக்தான் என்னுடைய இலக்கும். 2012-ம் ஆண்டில் இந்தியாவுக்குத் தங்கப் பதக்கத்தின் மூலம் பெருமை சேர்ப்பதையே இலக்காக கொண்டு பயிற்சி பெற்று வருகிறேன்.