கைவல்யகுமார் சில்லா, இவர் ஒரு மாற்றுத்திறனாளி. பார்வை இல்லாவிட்டாலும் இவரது விரல்கள் ராகங்களின் நுணுக்கமான இடங்களையெல்லாம் எட்டிப்பிடிக்கும் லாகவத்துக்கு இரட்டை சபாஷ் போட வேண்டும். மிருதங்கத்தில் காரைக்குடி மணியின் சீடரான சாய் நிவேதன். ஆஸ்திரேலியாவிலிருந்து தனது திறமையை சென்னை சங்கீத ரசிகர்களுக்கு காணிக்கையாக்க பறந்து வந்திருப்பவர்.
“கல்யாணி’ ராகத்தில் “கணபதே’ என்கிற சாகித்யத்துடன் தொடங்கியது நிகழ்ச்சி. ஒரு இடம் தள்ளி ஸ்வரம் பாடியது நிகழ்ச்சியின் விறுவிறுப்பை அதிகரித்தது. கல்பனா ஸ்வரம் மட்டும் பாடிவிட்டு “பகுதாரி’ ராக ஆலாபனையில் இறங்கினார் கைவல்யகுமார். எடுத்துக் கொண்ட சாகித்யம் அச்சுததாஸரின் “சதானந்த தாண்டவம்’. “முக்தரும் சித்தரும்’ என்ற இடத்தில் நிரவல் கல்பனா ஸ்வரம் பாடி கச்சேரியை களைகட்ட வைத்துவிட்டார்.
ஆரபியில் “ஓ ராஜிவாட்ச’, பாடிவிட்டு எல்லோரையும் போல இவரும் “பைரவி’ ஆலாபனையில் இறங்கினார். பைரவி ஆலாபனையை தொடங்கினாரோ இல்லையோ அட, இவரையும் தொற்றிக் கொண்டாதா பைரவி ஜுரம் என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டேன். எடுத்துக் கொண்ட சாகித்யம் பட்டணம் சுப்பிரமணிய அய்யரின் “நீ பாத முலே’. “ஸ்ரீ பஞ்ச நதிச’ என்கிற இடத்தில் நிரவல் ஸ்வரம் அமைத்துக் கொண்டார். குரலில் கனமும், ஆலாபனையில் அழுத்தமும் ஸ்வரப்ரஸ்தாரங்களில் வேகமும் கைவல்யகுமாரின் சங்கீதத்தின் சிறப்பம்சங்கள்.
மோஹனம் ராகத்தில் “கிருஷ்ண கானாமிருதம்’ என்கிற விருத்தத்தை பாடி தனது ஒரு மணி நேர நிகழ்ச்சியை நிறைவு செய்தார் கைவல்யகுமார் சில்லா.
சங்கீததத்திற்கு பார்வை வேண்டுமே