குழந்தையைப் பெற்ற அனைத்து தாய், தந்தையருக்கும் தான் பெற்ற குழந்தையை இப்படி வளர்க்க வேண்டும் அப்படி வளர்க்க வேண்டும், வருங்காலத்தில் அவர்கள் இன்னார் ஆகவேண்டும் என்ற கனவுகள் இருக்கும். அப்படியே இல்லாவிட்டாலும் தனது குழந்தை சமூகத்தில் பெயர்செல்லும்படியாக வாழவேண்டும் என்ற ஆசையாவது இருக்கும். ஜெனிதா ஆண்டோ என்ற இந்த குழந்தையைப் பெற்ற திரு.காணிக்கைராஜ் தம்பதியருக்கும் ஒரு ஆசையிருந்தது. அது தனது மகளை நடனப்பள்ளியில் சேர்த்து ஒரு நாட்டியக் கலைஞராக ஆக்க வேண்டும் என்ற ஆசை.
ஆனால் அங்கேதான் விதி விளையாடியது. ஜெனிதா ஆண்டோவிற்கு மூன்று வயதானபொழுது இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்டு இரண்டு கால்களும் செயலற்றுப் போயின. தான் பெற்ற குழந்தை இறந்துவிட்டால் கூட சிறிது நாட்களில் மறந்துவிடுவார்கள், ஆனால் ஏதோ ஒரு வகையில் ஊனத்தால் பாதிக்கப்பட்டால் அந்த குழந்தையைப் பெற்ற பெற்றோர் படும் பாட்டையும் அடையும் மன வேதனையையும் எழுத்தால் விவரிக்க முடியாது. தனது எண்ணக் கோட்டை தகர்ந்த அந்த நேரத்திலும் தனது மகள் மீது கொண்ட பாசத்தையும், தன்னம்பிக்கையையும் கைவிடவில்லை இவரது பெற்றோர்.
தனது நேரம் முழுவதையும் தனது குழந்தைக்காகவே செலவிடுவது என்றும் அவரை ஏதாவது ஒரு துறையில் ஜொலிக்கவைக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர் இவரது பெற்றோர். அதனால் அவர்கள் தேர்ந்தெடுத்த துறைதான் செஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சதுரங்க விளையாட்டு. இவரது தந்தை ஏற்கனவே இந்த துறையில் நல்ல அனுபவமுள்ளவர் என்பதாலும் தனது குழந்தைக்கு இந்த துறை பெரிதும் பொருந்தும் என்ற காரணத்தாலும் இந்த விளையாட்டுத்துறையினை தேர்ந்தெடுத்துள்ளார்.
முதலில் தனது மகளுக்கு தானே குருவாகவும் மாறினார் திரு.காணிக்கை இருதயராஜ். தனது பயிற்சியின் மூலமும் ஜெனிதா ஆண்டோவின் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தாலும் மிக குறுகிய காலத்திலேயே அந்த விளையாட்டில் பிரகாசிக்கத் துவங்கினார் ஜெனிதா ஆண்டோ. இவர் மூன்றாம் வகுப்பு பயின்றுகொண்டிருந்த சமயம் இவரது தந்தை பள்ளிகள் அளவிளான சதுரங்க விளையாட்டுப்போட்டிக்கான ஒரு விளம்பரத்தைக் கண்டுள்ளார். உடனே ஜெனிதா ஆண்டோ படிக்கும் பள்ளியின் தலைமையாசிரியரை அணுகி விசயத்தை கூறியுள்ளார்.
ஆனால் அந்த விளையாட்டுப் போட்டி ஆறாம் வகுப்பிற்கு மேல் பயிலும் மாணவர்களுக்கானது என்ற செய்தியை அறிந்து வருந்தினாராம். அதனைக்கண்ட அந்த பள்ளியின் தலைமையாசிரியர் முயற்சி செய்து இந்த பெண்ணின் திறமை மீதிருந்த நம்பிக்கையில் ஆட்டத்தின் விதிமுறையை சற்று தளர்த்தியிருக்கின்றனர். அந்த போட்டியில் இவர் மோதியது நன்கு சதுரங்கம் விளையாடத்தெரிந்த ஒரு பத்தாம் வகுப்பு மாணவனிடம். இவரும் சளைக்காமல் ஈடுகொடுக்க அந்த பத்தாம்வகுப்பு மாணவன் மிகுந்த போராட்டத்திற்குப்பிறகே இவரை வெள்ள முடிந்ததாம். அன்றிலிருந்து ஜெனிதா விளையாடும் அனைத்துப் போட்டிகளிலும் பரிசுகளைத் தட்டத் துவங்கியுள்ளார். தற்சமயம் இவர் தேசிய விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்கும் அளவிற்கு தன்னை வளர்த்துக்கொண்டு பல வெளிநாடுகளில் நடந்த போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகளை அள்ளிவந்துள்ளார்.
இவர் வசிக்கும் வீட்டில் ஒரு அறையையே ஒருக்கியிருக்கின்றார்கள் இவர் வாங்கிய பதக்கங்கள் கோப்பைகள் மற்றும் கேடையங்களுக்காகவே என்றால் இவரது திறமையினை உணர்ந்துகொள்ளளாம். தனது மகள் இந்த நிலைக்கு வந்தபிறகும் இவரது தந்தைக்கு ஒரு மிகப்பெரிய குறை “தனது மகளின் தொடரும் மருத்துவச் செலவிற்கும் அவர் பங்கேற்கும் அனைத்து வெளிநாடு மற்றும் உள்ளாட்டு போட்டிகளுக்கும் சிலவு செய்ய தன்னிடம் வசதியில்லை” என்ற குறைதான். எந்த ஒரு மாற்றுத்திறனாளருக்கும் தனது தாய் தந்தையரின் அரவனைப்பும், வழிகாட்டுதலும் இருந்து, தானும் முயன்றால் எந்த ஒரு சாதனையையும் செய்யலாம் என்பதற்கு செல்வி ஜெனிதா ஆண்டோ ஒரு முன்னுதாரனம்.
source : http://vrabled.blogspot.com/2011/07/blog-post_26.html