அரியலூர் ஒன்றியத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் முகாம் செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அனு ஜார்ஜ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரியலூர் ஒன்றியத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு அரசுத் துறைகள் மூலமாக நலத் திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் செப்டம்பர் 13-ம் தேதி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற உள்ளது.
முகாமில், இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகளுக்கு அந்த அட்டை வழங்கப்படும். தேசிய அடையாள அட்டை பெற்றவர்களுக்குத் தகுதியின் அடிப்படையில் உரிய உதவிகள் வழங்கப்படும். இதுவரையில் உதவித்தொகை பெறாத மாற்றுத் திறனாளிகளுக்கு தகுதியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் மூலம் உதவித்தொகை வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டா, அனைத்துச் சான்றுகள் வருவாய்த் துறை மூலமாகவும், வங்கிக் கடன்கள் வங்கிகள் மூலம் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சமூக நலத் துறை மூலம் தையல் இயந்திரம், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி, தாட்கோ மற்றும் மாவட்டத் தொழில் மையம் மூலம் கடனுதவி பெற்றுத் தருவதற்குரிய நடவடிக்கைகள் எடுப்பதோடு, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இதுவரை பதிவு செய்யாத மாற்றுத் திறனாளிகளுக்குப் பதிவு செய்யவும், பதிவு செய்துள்ளோருக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அரசு நலத் திட்ட உதவிகளை பெற தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகள் அனைவரும் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.