தண்டுவட காயம் உயிருள்ள ஒரு மனிதனின் மிகப்பெரிய பாதிப்பு ஆகும். பெரும்பாலும் வாழ்வின் இடையில் ஏற்படும் இந்நிலை ஒரு மனிதனின் செயல்பாடுகளையும் வாழும் முறைகளையும் புரட்டிப்போடுகிறது.
உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 2.5 – 5.0 லட்சம் மக்கள் தண்டுவட காயத்திற்கு உள்ளாகிறார்கள். அதாவது, ஒரு லட்சம் மக்கள்தொகையில் 4 முதல் 8 பேருக்கு ஒவ்வொரு ஆண்டும் தண்டுவட காயம் ஏற்படுகிறது.
உலகளவில், சாலை விபத்து, கட்டிடங்களிலிருந்து விழுதல், கலவரம், விளையாட்டு போன்றவையே 98 சதவீத தண்டுவட காயத்திற்கு காரணமாகும். இந்தியாவைப் பொறுத்தவரையில் மரத்திலிருந்து விழுதல், கிணற்றில் விழுதல்,, தற்கொலை முயற்சி, மருத்துவ அறுவை சிகிச்சையில் ஏற்படும் பிழை போன்றவையும் பரவலாக காணப்படுகின்றன.
இந்தியாவில் முன்பு சாலை விபத்துக்களால் தான் பெருமளவில் தண்டுவட காயம் ஏற்பட்டுவந்தது. அண்மைக் காலங்களில் கட்டிடங்களிலிருந்து விழுதலே முதல் இடம் பிடித்திருக்கிறது. கட்டுமானப்பணிகளில் ஏற்பட்டுள்ள அபரிதமான வளர்ச்சி பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பைக் கொடுக்கிறது. ஆனால், அப்பணிகளில் வேலைபார்க்கும் பணியாளர்களின் பாதுகாப்பு புறந்தள்ளப்பட்டதே பெரும்பாலான தண்டுவட காயம் ஏற்ப்படுவதற்கு காரணமாகும்.
தண்டுவட காயம் ஏற்பட்டவர்களுக்கு சிறுநீர், மலம்போதல், சுவாசித்தல், இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் போன்றவை கட்டுப்பாடின்றி இருக்கும். பெரும்பாலான தண்டுவடம் காயமடைந்தவர்களுக்கு வலி நீண்ட காலத்திற்கு இருந்துகொண்டே இருக்கும்
ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு, சிறுநீர்ப்பை தொற்று, சதைப்பிடிப்பு, எலும்பு மெலிதல், படுக்கைப்புண், நீண்டகால வலி மற்றும் மூச்சுத்திணறல் போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன.
ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 20-29 வயதினரும் 70 வயதை தாண்டியவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
பெண்களைப்பொறுத்தவரை 15-19 வயதினரும் 60 வயதை தாண்டியவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்
ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடிகள் செலவில் பல்வேறு ஆராய்ச்சிகள் உலக நாடுகள் பலவற்றில் நடத்தப்படுகின்றன. ஆனால், இதுவரை தண்டுவட காயத்தை குணப்படுத்தும் மருத்துவம் கண்டறியப்படவில்லை.
எனவே, மறுவாழ்வு சிகிச்சை ஒன்றே இன்றைக்கு சிறந்த தீர்வாகும். இயல் மற்றும் மறுவாழ்வு மருத்துவர்களும் அவர்களுடன் இனைந்து பணியாற்ற இயன்முறை மற்றும் செயல்முறை மருத்துவர்களும், செவிலியரும், சமூகப் பணியாளர்களும் உள்ளடக்கிய மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை எடுத்தவர்கள் விரைவில் புத்துயிர் பெற்று நல்லதொரு வாழ்வை நீண்ட காலம் வாழ்ந்து வருவதை காணலாம்.
செப்டம்பர் 5 ஆம் தேதியை தண்டுவட பாதிப்பு நாளாக கருதி உலகம் முழுவதுமுள்ள மக்களுக்கு தண்டுவட காயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறோம்.
சாலை விதிகளை மீறினால்
வாழ்வின் விதிகள் மாறலாம்
விதிகளை மதிப்போம்
விபத்தினை தடுப்போம்
விபத்தில்லா தேசம்
ஒரு நொடி விபத்து
வாழ்நாள் பாதிப்பு
நாங்கள்
சாலை விதிகளை
மதித்திருக்கலாம்நீங்கள்
மதிக்காமல் இருக்கலாமா?
விபத்தில் இறப்பிற்கு
அடுத்தநிலை தண்டுவடம் காயமடைதல்
போன்ற வாசகங்கள் தண்டுவட காயத்தின் தீவிரத்தை எடுத்துச் சொல்லும்.
ஞானபாரதி –
தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு
(Spinal Injured Persons Association) SIPA
www.sipa.ngo
+91 9962528232