வாயால் ஓவியம் வரையும் மாற்றுத்திறனாளி ஜனார்த்தனன்: சின்ன வயதில் நான் ரொம்ப துறுதுறுவென இருப்பேன். எட்டு வயது இருக்கும் போது. ஒரு நீளமான இரும்புக் கம்பியைத் தலைக்கு மேல் தூக்கியபோது மேலே கடந்து போன மின்சாரக் கேபிளில் இரும்புக் கம்பி உரசி, மின்சாரம் பாய்ந்து, என்னை தூக்கி அடித்தது.கண் முழித்துப் பார்த்தபோது, இரண்டு கையும், ஒரு காலும் இல்லை. வேதனையில் வீட்டிலேயே முடங்கிவிட்டேன். பின், எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டு வாயால் பல வேலைகளைச் செய்ய ஆரம்பித்தேன். பட்டாம் பச்சி, பூனை, கார்னு சின்ன, சின்னதா ஓவியங்கள் வரைந்தேன். நண்பர்கள் உற்சாகப்படுத்தினார்கள். வாழலாம்னு நம்பிக்கை வந்தது.இந்திய அளவில் 30 ஆயிரம் பேர் பங்கேற்ற ஓவியப் போட்டியில் முதல் பரிசு வென்றேன். கலை பண்பாட்டு துறையின் ஓவியப் போட்டியில், முதல் பரிசு என, இது வரை நூற்றுக்கணக்கான பரிசுகள் வென்றுள்ளேன். இந்தியாவில் முதன் முறையாக, துணைக்கு ஆள் இல்லாமல், வாயால் பேனா பிடிச்சு பரீட்சை எழுதினேன்.அதைக் கேள்விப்பட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, எனக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் தேர்வு எழுத அனுமதி கொடுத்தார். அதிலிருந்து மாற்றுத் திறனாளிகள் தேர்வு எழுத கூடுதலா ஒரு மணி நேரம் ஒதுக்கினாங்க. என்னால், முடிந்த சிறிய மாற்றம்னு மனதில் நிம்மதி.எனக்கு ஓவியம் மட்டுமல்ல, கம்ப்யூட்டர் கிராபிக்சிலும், ஆர்வம் அதிகம். அதில் என் திறமையை வளர்த்துக் கொள்ள முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். விரைவில், அதிலும் சாதிப்பேன்.