மாற்றுத்திறனாளிகள் நலன்
4 சதவீத இடஒதுக்கீடு
2016 ஆம் ஆண்டு, மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தை தமிழ்நாடு மிக முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. அரசு வேலைவாய்ப்புகளிலும் பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் பணி நியமனங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில், நிரப்பப்படாமல் நிலுவையிலுள்ள அனைத்து காலிப் பணியிடங்களுக்கும் சிறப்பு ஆட்சேர்ப்பு பணிகள் நடத்தப்படும்.
பராமரிப்பு மானியம்
தற்போது, அறிவுசார் குறைபாடுகள் உடையோர், கடுமையாக ஊனமுற்றோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு பராமரிப்பு மானியமாக மாதம் ஒன்றிற்கு 1,500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 1.75 இலட்சம் நபர்கள் பயன்பெறும் வகையில் 313.26 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் மற்றும் பார்க்கின்சன் நோய், தண்டுவட மரப்பு நோய் ஆகிய நாட்பட்ட நரம்பியல் பாதிப்புக்கு உள்ளான நபர்களுக்கும், இனிமேல் மாதாந்திர பராமரிப்பு மானியம் வழங்கப்படும். புதிதாக சேர்க்கப்பட்ட பிரிவுகளுக்கும், உதவித்தொகை கோரி நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை ஒப்புதல் செய்வதற்கும், 2.1 இலட்சம் தகுதியுள்ள பயனாளிகள் பயன் பெறும் வகையில், 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு 375 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
பார்வைத் திறனற்றோர்
பார்வைத் திறனற்றோர் மற்றும் கேட்கும் திறனற்றோர், பிறரை எளிதில் தொடர்பு கொள்வதற்கு, தக்க செயலிகளுடன் கூடிய திறன்பேசிகள், 10,000 பார்வைத் திறனற்றோர் மற்றும் கேட்கும் திறனற்றோருக்கு 10 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக 667.08 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
வாழ்வாதார இயக்கங்கள்
கிராமப்புற, நகர்ப்புரப் பகுதிகளுக்கான வாழ்வாதார இயக்கங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கம் மாநிலத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும், அதாவது 388 வட்டாரங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, இந்த இயக்கத்தின் கீழ், 83,257 சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த இயக்கத்திற்காக, வரவு-செலவுத் திட்டத்தில் 450.65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீன் தயாள் உபாத்தியாய கிராமப்புறத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மொத்தமாக 1,08,416 இளைஞர்கள் 2014-15 முதல் இது வரையில் பயிற்சி பெற்றுள்ளனர். 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இந்த திட்டத்திற்காக 299.60 கோடி ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு, 28,063 இளைஞர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும். தமிழ்நாடு கிராமப்புற புத்தாக்கத் திட்டம் (கூயஅடை சூயனர சுரசயட கூசயளேகடிசஅயவiடிn ஞசடிதநஉவ) 26 மாவட்டங்களில் உள்ள 120 வட்டாரங்களில் உலக வங்கியின் நிதியுதவியுடன், 918.20 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தொழில் முனைவோர்களை ஊரகப்பகுதிகளில் ஊக்குவிப்பதற்காக, அதிலும் குறிப்பாக, பெண்கள், பழங்குடியினர், ஆதிதிராவிடர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை தொழில்முனைவோர்களாக உருவாக்குவதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக 163.35 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புரட்சித் தலைவி அம்மா விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டம்
கடந்த வருட வரவு-செலவுத் திட்டத்தில் நான் அறிவித்ததின்படி, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்துடன் (டுஐஊ) இணைந்து, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்துக் குடும்பங்களும் பயனடையும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள, ‘புரட்சித் தலைவி அம்மா விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்திற்கான’ விரிவான வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இயற்கை மரணங்களில், தற்போது வழங்கப்படும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கான இழப்பீட்டுத் தொகை இரண்டு இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கான இழப்பீட்டுத் தொகை நான்கு இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். விபத்தினால் நிரந்தர ஊனமுற்றோருக்கு உதவித்தொகை இரண்டு இலட்சம் ரூபாய் வரையும் கணிசமாக உயர்த்தி வழங்கப்படும். இத்திட்டம், விரைவில் அறிமுகப்படுத்தப்படும். 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் இத்திட்டத்திற்காக 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம், பயன்பெற முடியாத நபர்களுக்காக, தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் விபத்து நிவாரணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். உழவர் பாதுகாப்புத் திட்டம், 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 200.82 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.