தயவுசெய்து மறுவாழ்வு பயிற்சி பெறுங்கள் - சசிகுமார் - enabled.in

உள்ளத்தனையது உயர்வு

கனிகளைத் தர எந்த மரமும் காசு கேட்பதில்லை. அப்படிப்பட்ட தன்னலம் பாராத மனிதர்களில் ஒருவர்தான் சசிகுமார். தான் மேற்கொள்ளும் பணியினை அர்ப்பணிப்புடன் திறம்பட செய்து முடிக்கும் வல்லமை கொண்டவர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காரணை கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.

சசிகுமார் - தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு - Spinal injured persons association

அவரது குடும்பம் விவசாயம் மற்றும் அரிசி வியாபாரம் செய்து வந்தது. 1.9.2005 அன்று அரிசி வியாபாரம் தொடர்பாக டிராக்டரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அவர் டிராக்டருக்கு அடியில் சிக்கிக் கொண்டார். பின் அவரை மீட்டு கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தண்டுவடத்தில் டி10 அளவில் காயம் ஏற்பட்டு இருப்பதால் வேறு பெரிய மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் வலியுறுத்தினர். பிறகு அவரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனைகளுக்குப் பின் முதுகில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் தண்டுவட பாதிப்பால் இடுப்புக்குக் கீழ் செயலிழந்து அவரால் நடக்க இயலாமல் போய்விட்டது.

தண்டுவட காயத்திற்குப் பிறகான வாழ்க்கை

தண்டுவட காயத்திற்குப் பிறகான வாழ்க்கையைப் பற்றி சசிகுமார் கூறுகிறார்; மருத்துவ சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய பிறகு அடிக்கடி சிறுநீர் தொற்றால் அவதிப்பட்டேன். சிறுநீர் தொற்றின் பக்க விளைவால் காய்ச்சல் தொடர்ந்து இருந்தது. சில சமயம் சிறுநீரில் ரத்தம் வந்தது. மூன்று ஆண்டுகள் அழுத்தப் புண்ணால் பாதிக்கப்பட்டு மன வலிமையற்று வாழ்க்கையில் முழுவதும் சோர்ந்து போயிருந்தேன்.

சிறிது காலத்திற்குப் பின் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மறுவாழ்வுப் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி எடுத்துக்கொண்டேன். என் வேலைகளை நானே செய்துகொள்ளவும், காலிபர் அணிந்து நடக்கவும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டது. பயிற்சி மையத்தில் இருந்து திரும்பி வந்ததும் என்னுடைய வேலைகளை நானே செய்து கொண்டேன்.

என்னைப்போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது உதவிகளைச் செய்ய வேண்டுமென சிந்திக்கத் தொடங்கினேன். தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களின் முக்கியமான பிரச்சனை சிறுநீர் கழிப்பதற்கான சிறுநீர் வடிகுழாய், சிறுநீர்ப்பை போன்றவற்றை விலைகொடுத்து வாங்க வேண்டியிருந்தது. வறுமை நிலையிலிருந்த பலருக்கும் அது கடினமாக இருந்தது. வறுமை நிலையிலிருந்த பல நண்பர்களுக்கும் திருச்செங்கோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் விஜயகுமார் மூலம் சிறுநீர் வடிகுழாய் மற்றும் சிறுநீர்ப்பை போன்றவற்றை வாங்கிக் கொடுத்தேன்.

சிபா

இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த நண்பர் அக்பர் அலி மற்றும் மனோகரன் 2016ஆம் ஆண்டு சிபா சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு எனக்கு அழைப்பு விடுத்தனர். சிபா சந்திப்பில் கலந்துகொண்டு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக இந்த அமைப்பு செயல்படும் விதத்தை அறிந்து கொண்டேன். அந்தச் சந்திப்பில்தான் தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான நண்பர்கள் தண்டுவடபாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர் என்பதையும் நான் அறிந்துகொண்டேன்.

சிபா அமைப்பு, தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைத்து அவர்களது தேவைகளை அரசிடம் எடுத்துக் கூறி தேவையான உதவிகளை அரசு திட்டங்கள் மூலம் செயல்படுத்த முயற்சிகள் எடுத்து வந்தது இந்தச் செயல்பாடுகள் என்னைக் கவர்ந்ததால் சிபா அமைப்பில் இணைந்து செயல்படுவது என தீர்மானித்தேன். சிபா அமைப்பின் முக்கிய நிர்வாகிகளான ஞானபாரதி, சுரேஷ் கிருஷ்ணா, வெங்கட பூபதி ஆகியோரின் நட்பும் ஆலோசனைகளும் எனக்குக் கிடைத்தது.

அழுத்தப் புண் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் தொடர்ந்து தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் மரணம் அடைந்தது என்னைக் கவலை கொள்ளச் செய்தது. சென்னை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், கடலூர் போன்ற வட மாவட்டங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட நண்பர்களுக்கு மறுவாழ்வு பயிற்சியின் அவசியம், அழுத்தப்புண் வராமல் பாதுகாப்பது போன்ற ஆலோசனைகளைக் கூறி வருகிறேன். தண்டுவடம் பாதிக்கப்பட்ட 60 புதிய நபர்களைக் கண்டறிந்து ஆலோசனைகளைத் தந்து அமைப்பில் இணைத்துள்ளேன்.

2018ஆம் ஆண்டு சென்னை சிபா சந்திப்பை ஒருங்கிணைப்பதற்கான பணிகள் எனக்குத் தரப்பட்டது. அதனை நண்பர்களுடன் இணைந்து செவ்வனே செய்தேன்.

அதேபோல காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைத்து பொறுப்பாளராகச் செயல்பட்டேன். 2019ஆம் ஆண்டு ஜ ̈லை மாதத்தில் காஞ்சிபுரம் மாவட்ட முதல் சிபா சந்திப்பினை வண்டலூர் அருகிலுள்ள தாகூர் மருத்துவக்கல்லூரியில் சிபா அமைப்பின் நிர்வாகிகள் உதவியுடன் நடத்தினேன். இந்தச் சந்திப்பில் 34 நண்பர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு. ஸ்ரீநாத் அவர்கள் மற்றும் சிபாவின் நிர்வாகிகளான ஞானபாரதி, வெங்கட பூபதி, வந்தியத்தேவன், ரவிச்சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும், 2019ஆம் ஆண்டு சென்னை சிபா சந்திப்பினை நடத்தும் பணிகளில் ஒருங்கிணைப்பு செய்தேன். இச்சந்திப்பில் 47 நண்பர்கள் கலந்துகொண்டனர். மேலும், 2019ஆம் ஆண்டு சிபா அமைப்பின் காஞ்சிபுரம் மாவட்ட தகவல் திரட்டும் பணிகளையும் செய்துவருகிறேன்.

மறுவாழ்வு மையத்தில் சேர்ந்ததால்தான் அழுத்தப்புண் வராமல் தவிர்ப்பது பற்றியும், என் வேலைகளைச் சுயமாக செய்துகொள்வது பற்றியும் கற்றுக்கொள்ள முடிந்தது. தண்டுவடம் பாதிக்கப்பட்ட நம் நண்பர்களுக்கு என் வேண்டுகோள் என்னவென்றால் “தயவுசெய்து மறுவாழ்வு பயிற்சி பெறுங்கள்” அது மட்டும்தான் உங்கள் வாழ்க்கையை ஒரளவிற்கேனும் மீட்ணீடடுக்க உதவும். பயிற்சி எடுத்துக் கொண்டபிறகு தொழில் செய்து பொருளாதார ரீதியாக தங்களை உயர்த்திக் கொள்ள முடியும். அதற்கு முதலில் பாதிக்கப்பட்ட நண்பர்கள் வெளியே வரவேண்டும்.
“தயக்கம் தவிர்ப்போம் தலைநிமிர்ந்து வாழ்வோம்”.

இரா.அப்பாண்டைராஜ், ஆலகிராமம்

தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு (SIPA)

Email : sipaspinal@gmail.com
Phone : + 91 9962528232

Leave a comment

Share Your Thoughts...