சமீபத்தில் சென்னை, ஆழ்வார்பேட்டை, நாரத கான சபாவே அசந்து போனது சுடிக்ஷ்னா வீரவள்ளியின் நாட்டியத்தைப் பார்த்து! இவரின் நாட்டியத்தை சிறப்பாக ரசிக்க வைக்கும் காரணங்கள் மூன்று. அவரது அர்ப்பணிப்பான நடனம்; சிகாகோவில் வாழும் இந்தியரான இவர், சர்வதேச அளவில் பல மேடைகள் கண்டிருந்தாலும்… இந்த பாரம்பரிய வேரைத் தேடி சென்னைக்கு ஓடி வந்திருக்கும் அவரின் ஆர்வம்; மூன்றாவதாக… சுடிக்ஷ்னா, ஒரு மாற்றுத்திறனாளி!
அரங்கில் கிரிஜா ராமசாமியின் கணீர் குரலும், சுடிக்ஷ்னாவின் தாய் வனிதா வீரவள்ளியின் நட்டுவாங்கமும் கலந்து இனிமை சேர்க்க, ‘ஆண்டாள் கவுத்துவம்’, ‘ராமா நீவே ரக்ஷகூடவனி’ வர்ணம், ‘வலசி’ ராகத்தில் ‘தீம்…தீம்…தீம்… தனததீரனா…’ தில்லானா என இரண்டு மணி நேர நாட்டிய நிகழ்ச்சியில் கண்ணபிரானையே கண்முன் நிறுத்திய சுடிக்ஷ்னாவுக்கு மணிக்கட்டுக்கு கீழ் வலது கையும், முட்டிக்கு கீழ் வலது காலும் இல்லை. செயற்கை கால் பொருத்தியிருக்கிறார். ஆனாலும், கொஞ்சமும் சோர்வில்லாமல் பம்பரமாக சுழன்ற அந்த பதினாறு வயதுப் பெண், தன் வார்த்தை களிலும் வாழ்க்கையிலும் நிரப்பி இருப்பது தன்னம்பிக்கை!
”எங்கம்மா, அமெரிக்காவோட சிகாகோ நகரத்துல ‘பரதம்’னு ஒரு நாட்டிய ஸ்கூல் நடத்திட்டிருக்காங்க. அப்பா, மிருதங்கம் வாசிப்பார். நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து பாட்டு, டான்ஸ்தான் எனக்கு தாலாட்டு. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மட்டுமில்லாம, எங்கெங்க எல்லாமோ இருந்து அங்க குடியேறி இருக்கற பல நாட்டுக்காரங்களும் ஆர்வத்தோட ஓடி வந்து நடனம் கத்துக்கறதைப் பார்க்குறப்ப… ஆச்சர்யமா இருக்கும். நாலு வயசாகும்போது, ‘நானும் சலங்கை கட்டிக்கறேம்மா…’னு சொல்லி பரதம் கத்துக்க ஆரம்பிச்சேன். ‘இந்த நிலையில இவள கஷ்டப்படுத்திடக் கூடாதே’ங்கற தவிப்போட எங்கம்மா நடனம் சொல்லிக் கொடுத்ததும், ‘நாம கஷ்டப்படறோம்னு அம்மா நினைச்சுடக் கூடாதே…’னு முகத்துல புன்னகையை மாத்திக்காம நான் நடனம் கத்துக்கிட்டதும்… அம்மா – பொண்ணா, குரு – சிஷ்யையா எங்களுக்கிடையில பூத்த அந்த உணர்வு… அழகு! ரெண்டு வருஷத் துக்கு முன்ன அரங்கேற்றம் பண்ணினப்போ, அவ்வளவு ஆனந் தமா இருந்துச்சு ரெண்டு பேருக்கும்.
சிகாகோ இண்டியன் கான்ஸலேட், கோயில் விழாக்கள், மேடை நிகழ்ச்சிகள்னு நிறைய புரோகிராம் பண்ணியிருக்கேன். பாட்டுலயும் நான் பாஸ்… மேடைகள்ல கச்சேரிகள் பண்ற அளவுக்கு! பல சர்வதேச அரங்குகள் பார்த்துட்டாலும், நாட்டிய மேதைகளும், முன்னணி கலைஞர்களும், கலை ரசிகர்களும் கூடற இந்த டிசம்பர் சீஸன்ல கச்சேரி பண்ண சென்னைக்கு வர்றது, தேவலோகத்துக்கே வந்திட்டு போற மாதிரி இருக்கு!’ என்றார் அழகு தமிழில் மனதால் பூரித்து!
மகளின் நாட்டியத்தைப் பார்த்த பரவசமும், அனைவரின் பாராட்டும் இன்ப மழையென தன்னை நனைக்க, நெகிழ்ந்து நின்றிருந்தார் அம்மா வனிதா வீரவள்ளி. ”சுடிக்ஷ்னா, சாத்விகானு எனக்கு ரெண்டு பொண்ணுங்க. சுடிக்ஷ்னா ப்ளஸ் டூ படிக்கறா. சாத்விகா சிக்ஸ்த் படிக்கறா. கணவர் தியாகு சிகாகோவுல பெரிய நிறுவனத்துல வேலையில இருக்கார். சுடிக்ஷ்னா பிறந்தப்போவே… கை, கால்ல பாதிப்பு இருந்துது. ஆனாலும், அவ்ளோ துறுதுறுனு இருப்பா அவ. ‘சுடிக்ஷனா’னா வெரி ஷார்ப்னு அர்த்தம். அந்தப் பெயருக்கு ஏத்தபடிதான் வளர்ந்தா.
அவளோட குறையை நிவர்த்தி பண்ண நிறைய டாக்டரை கன்சல்ட் பண்ணினோம். ஒரு கட்டத்துல இதை மாத்த முடியாதுனு தெரிஞ்சப்போ, முழு மனசோட ஏத்துக்கிட்டு அவளை வளர்க்க ஆரம்பிச்சோம். அவளுக்கு ஆர்டிபிஃஷியல் லெக் பொருத்தினதும் நல்லா நடக்க ஆரம்பிச்சா. வலி எதுவும் இல்லை. திடீர்னு ஒரு நாள், ‘நானும் ஆடறேன்…’னு வந்து நின்னா. ‘தாராளமா ஆடலாம்…’னு டாக்டர் சஜஸ்ட் பண்ண, பரதம் கத்துக் கொடுத்தேன். அவளோட வில் பவரையும், கிரகிக்கற புத்தியையும் ஒரு அம்மாவா விட, குருவாதான் முழுசா உணர்ந்தேன்” என்றவர்…
”எவ்வளவு நேரம் ஆடினாலும், எந்த புரோகிராம்ல ஆடிட்டு வந்தாலும் கால் வலிக்குதுங்கற வார்த்தையே அவகிட்ட வந்ததில்ல. பாட்டுலயும் அவ பிரமாதப்படுத்துவானு நாங்க எதிர்பார்க்கல. காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வான் சூரிய பிரகாஷ்கிட்ட இப்போ பாட்டு கத்துக்கறா. புதுப் புது மெட்டுக்களைப் போட்டு பாடல்களை இவளே கம்போஸ் பண்றதைப் பார்த்து குருவே பாராட்டியிருக்கார். இன்னிக்கு ‘வலசி’ ராகத்துல ஆடின தில்லானாகூட, இவ கம்போஸ் பண்ணதுதான்!” என்று மகளை உச்சி மோர்ந்து மெச்சுகிறார் வனிதா.
சுடிக்ஷ்னாவின் பாட்டி, ”வருஷா வருஷம் இவங்க வரவுக்காக நாங்க காத்திருப்போம். போன வருஷம் வந்தப்போ, முழங்கால் வரைக்கும் தழைய தழைய கூந்தல் இருந்தது. அதை அப்படியே வெட்டி, கேன்சர் கொடுத்துட்டா. நேரம் கிடைக்கும்போதெல்லாம் வயதானவர்களுக்கு கம்ப்யூட்டர் கத்துத் தர்றா. பாட்டு, டான்ஸ்கூட அன்பு, பாசம், மரியாதை, சேவை மனப்பான்மைனு அத்தனையையும் இந்தக் குழந்தைக்கு அள்ளித் தந்திருக்கான் ஆண்டவன்!” என்றார் பாசப் பரவசத்தில்!
அத்தனையையும் உள்வாங்கிக் கொண்டு தொடர்ந்தார் சுடிக்ஷ்னா… ”ஸ்கூல்ல சேர்றதுக்கு கொடுத்தப்போ, ‘உன்னோட லீடர்ஷிப் குவாலிட்டியா எதை நினைக்கறீங்க..?’னு கேட்டாங்க. ‘டான்ஸ்’னு சொன்னேன். ‘இது எப்படி லீடர் ஷிப் குவாலிட்டி?’னு கேட்டாங்க. ‘என்னை முதன் முதல்ல பார்க்கறவங்களுக்கு, ‘ஐயோ பாவம் இந்தப் பொண்ணு…’னு ஒரு பரிதாப உணர்வு தோணலாம். ஆனா, நார்மலா உள்ளவங்களை விட நான் எந்த விதத்திலும் குறைவில்லைனு அவங்களுக்கு உணர்த்தணும்னு தவிக்கும் எனக்கு. அதுக்கு எனக்கு கிடைச்ச தூண்தான் பரதம். என்னைப் பார்த்து பரிதாபம் காட்டறவங்களைக் காட்டிலும், என்னால அச்சீவ் பண்ண முடிஞ்சிருக்குங்கறது, எனக்கு நிறைவா இருக்கு! அதனால அதையும் ஒரு தலைமைப் பண்பாகத்தான் பார்க்கறேன்!’னு சொன்னேன். உடனே அட்மிஷன் கொடுத்துட்டாங்க. அது அட்மிஷனுக்காக நான் சொன்ன பதில் இல்லை. எனக்கு நானே சொல்லிக்கற மந்திரமும்கூட!” – சுடிக்ஷ்னாவின் வார்த்தைகளில் அத்தனை தெளிவு!
பலமும் வளமும் தரும் மந்திரம்!