பிறவியிலேயே இரண்டு கைகளும் இல்லாமல் நம்பிக்கையை மட்டுமே வைத்துக்கொண்டு அனைத்து வேலைகளையும் கால்களாலேயே செய்து காண்போரை பிரமிக்க வைக்கிறார் ஓர் இளம் பெண்.சிலர் எல்லா உறுப்புகளும் நன்றாக இருந்தும் பிச்சை எடுத்தும் ஏமாற்றி பிழைத்து வாழ்கின்ற இந்த கால கட்டத்தில் பிறவியிலேயே இரு கைகளையும் இழந்த இப்பெண் தன்னம்பிக்கை ஒன்றையே கையாக கொண்டு அனைத்து வேலைகளையும் தானே செய்து எவர் உதவியும் இன்றி வெற்றி நடைபோடும் காட்சி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. உடல் உறுப்பு குறைபாடு இருப்பினும் உள்ளம் உறுதியுடன் செயலாற்றினால் இந்த உலகை அளக்கலாம் என்று தன்னம்பிக்கை ஊட்டுவார்கள் அறிஞர்கள். அந்த வகையில் இந்தப் பெண் ஒவ்வொரு நாளும் தனது அன்றாட பணிகளையும் தாமே செய்வதோடு மட்டுமல்லாமல் வீட்டின் வறுமையைப் போக்கவும் வாழ்வின் ஜீவாதாரத்தைப் பெருக்கவும் ஒரு சிறு இட்லி கடையை வைத்து நடத்தி வருகிறார்.திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்துள்ள ஆர்.கே.பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்டது குருவப்பநாயுடு கண்டிகை கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த மணிவேல், எலன் தம்பதியருக்கு 5 பிள்ளைகள். இதில் மூத்த மகளான பரமேஸ்வரிக்குப் பிறவியிலிருந்தே இரு கைகளும் இல்லை. ஆனால் மனம் தளராத இவர் தனது கால்களாலேயே எழுதப் படிக்க கற்றுக்கொண்டு 5 -ம் வகுப்பு வரை படித்து உள்ளார்.இவர் இப்பகுதி மகளிர் குழுத் தலைவியாகவும் செயல்பட்டு வருகிறார். இவர் இரண்டு கைகள் இல்லாத நிலையிலும் தனது தந்தை வைத்துள்ள இட்லி கடையில் தந்தைக்கு உதவியாக அனைத்து வேலைகளையும் காலிலேயே செய்து வருவதோடு கடைக்கு வருபவர்களையும் வியப்பில் ஆழ்த்துகிறார். இது மட்டுமில்லாமல் வீட்டு வேலைகளான கோலம் போடும்வது, உணவு சமைப்பது, துணி துவைப்பது, தலையை வாருவது, கைப்பேசியை பயன்படுத்தி பிறரிடம் பேசுவது, வீட்டை சுத்தப்படுத்துவது உள்ளிட்ட பல வேலைகளையும் இவர் தனது கால்களாலேயே செய்து பார்ப்போரை பிரமிக்க வைக்கிறார். மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு உள்ள உடல் குறைபாடுகளை எண்ணி வேதனைப்படும் இக்காலத்தில் தனக்கு இரண்டு கைகள் இல்லை என்ற நிலையிலும் தனது வேலைகளை தானே செய்துகொண்டு யாருக்கும் சுமையாக இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் தனது வேலைகளை தானே செய்து கொள்கிறார் இவர். கை, கால்கள் இருப்பவர்களே தன்னுடைய வேலைகளை செய்ய கஷ்டப்படும் இக்காலத்தில் பரமேஸ்வரியைப் போன்றோர் நம்பிக்கையை மட்டுமே வைத்துக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இதுகுறித்து பரமேஸ்வரி கூறும்போது, “”நான் பிறந்தபோது இரு கைகளும் இல்லாமல் பிறந்தேன். சிறு வயதில் இப்படி பிறந்துவிட்டோமோ என எண்ணி வருத்தப்பட்ட காலங்கள் உண்டு. நாளடைவில் அந்த குறையை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சிறு வயதிலிருந்தே சிறு வேலைகளை எனது கால்களாலே செய்ய தொடங்கினேன். பிறகு அனைத்து வேலைகளையும் செய்யப் பழகிக்கொண்டேன். தற்போது திருத்தணி ஒன்றியம் கே.ஜி.கண்டிகையில் எனது தந்தை வைத்திருக்கும் இட்லி கடைக்கு சென்று அவருக்கு உதவியாக அனைத்து வேலைகளையும் செய்து வருகிறேன். மேலும் வீட்டில் இருக்கும்போது எனது வேலைகளை நான் யாரிடமும் செய்ய கேட்பதில்லை. எந்த வேலையாக இருந்தாலும் நம்மால் செய்ய முடியம் என நம்பிக்கை வைத்துக்கொண்டு எனது வேலைகளை நானே செய்துகொள்கிறேன். மாற்றுத்திறனாளியாக பிறந்துவிட்டோமோ என எண்ணி யாரும் வருத்தப்படக்கூடாது. மேலும் யாரும் வருத்தப்படுவது, தற்கொலை செய்துகொள்வது போன்ற செயல்கள் செய்ய கூடாது. வருத்தப்படாமல் முயற்சி செய்து மகிழ்ச்சியாக இந்த உலகில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். இந்த உலகம் நம் எல்லோருக்குமானதுதான். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பல்வேறு நலதிட்டங்களைச் செய்து வருகின்றது. என்னைப் போன்ற மாற்று திறனாளிகளுக்கு வங்கியின் மூலமாக ஏதாவது கடனுதவி கொடுத்து உதவ அரசு அதிகாரிகள் யாரேனும் முன்வந்தால், நான் சிறு கடையை வைத்து எனது வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வேன்” என அவர் மனமுருக கூறினார்.