மாற்றுத்திறனாளி ஆசிரியரை மலைக்கிராம பள்ளியில் பணி நியமனம் செய்ததால், அவர் தினமும் 128 கி.மீ., தூரம் இருசக்கர வாகனத்தில் பயணித்தும், எட்டு கி.மீ., தூரம் மலைப்பாதையில் நடந்தும் பள்ளி சென்று மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தருகிறார்.
தேனி மாவட்டம், வருஷநாடு அருகே உள்ளது காந்திகிராமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. ஓராசிரியர் பள்ளியான இங்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ள கேசவன் போலியோவால் ஒரு கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. ஆண்டிபட்டியில் வசிக்கும் இவர் அங்கிருந்து 68 கி.மீ., தொலைவில் உள்ள மலை கிராமமான காந்திக்கிராமத்தில் பணி புரிந்து வருகிறார். இதற்காக இருசக்கர வாகனத்தில் ஆண்டிபட்டியிலிருந்து 64 கி.மீ., பயணித்து வருஷநாடு, வாலிப்பாறையை கடந்து சீலமுத்தையாபுரம் வரும் கேசவன், அங்கு வாகனத்தை நிறுத்தி விட்டு, நான்கு கி.மீ., தூரம் மலைப்பாதையில் நடந்து காந்திக்கிராமம் பள்ளிக்கு செல்கிறார்.
சில நேரங்களில் பள்ளிக்கு கற்றல், கற்பித்தல் உபகரணங்களை கொண்டு செல்ல வேண்டும். இதனை தூக்கிக் கொண்டு இவரால் நடக்க முடியாது என்பதால் யாரையாவது ஊரில் இருந்தே சம்பளம் கொடுத்து தூக்கி வரச்சொல்லி, அவர்களையும் உடன் அழைத்து வருகிறார். இப்பள்ளியில் முதல் வகுப்பில் நான்கு பேர், இரண்டாம் வகுப்பில் இருவர், மூன்றாம் வகுப்பில் இருவர், நான்காம் வகுப்பில் நான்கு பேர், ஐந்தாம் வகுப்பில் இருவர் என மொத்தம் 14 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் ஏழு பேர் வழக்கமாக பள்ளிக்கு வருபவர்கள். மற்றவர்கள் எப்போதாவது வருவர். ஐந்து வகுப்புகளுக்கும் கேசவன் ஒருவரே ஆசிரியர்.
முடியாது என்பது எதுவும் இல்லை.