தேனி மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆரம்ப கால பயிற்சி மையம் மற்றும் பகல் நேரக் காப்பகம் தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பூ.முத்துவீரன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட ஊனமுற்றோர் அறக்கட்டளை சார்பில் தேனி என்.ஆர்.டி. அரசு மருத்துவமனை வளாகத்தில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான ஆரம்ப காலப் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு 6 வயது வரையுள்ள மன வளர்ச்சி குன்றிய, மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அடிப்படை வாழ்க்கைக் கல்வி, தசைப் பயிற்சி, யோகா பயிற்சி, மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது. பயிற்சிக்கு வரும் குழந்தைகளுக்கு சிற்றுண்டி இலவசமாக வழங்கப்படும். குழந்தை மற்றும் பெற்றோர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். மேலும், சின்னமனூரில் பஸ் நிலையம் பின்புறமுள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு பகல் நேரக் காப்பகம் தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு பயிற்சிக்கு வந்து செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவு, பஸ் கட்டணத்துக்கு மாதம் ரூ.300 வழங்கப்படும். மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளின் பெற்றோர்கள் பயிற்சி மையம் மற்றும் காப்பகத்தில் குழந்தைகளின் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது