மாற்றி யோசிக்கலாம் - enabled.in

மாற்றி யோசிக்கலாம்

மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? சாதிப்பதற்கான வாசல்கள் அவர்களுக்குத் திறந்திருக்கின்றனவா?

வாழ்க்கையை சாதிப்பதற் கான ஒரு களமாகக் காண்பவர்கள் வெகு சிலரே. ஆரோக்கியமாகப் பிறந்து வளர்ந்த நம்மில் பலருமே படித்து ஒரு வேலையில் சென்று அமர்வதற்குள் காற்றுப்போன பலூனாக மாறிவிடுகிறோம். இந்த நிலையில் ஏதோ ஒரு திறன் குறைவுடன் பிறக்கும் மாற்றுத் திறனாளிகள், அந்தக் குறையையும் மீறி வாழ்க்கையில் வெற்றிகாண்பது என்பது ஒரு சவால்தான். ஆனாலும் அந்தச் சவாலை எதிர்கொண்டு வெற்றிகண்டவர்கள் பலர்.
“கடந்த ஐம்பதாண்டுகளில் மாற்றுத் திறனாளிகள் குறித்த சமூகத்தின் பார்வையிலும் நிலையிலும் நிறைய மாறுதல் வந்திருப்பதைப் பார்க்கமுடிகிறது. என்னுடைய காலத்தில்  மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளிகள் வெகு அபூர்வம். அப்படி நடந்த பள்ளிகளும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பிடமாகத்தான் இருந்தன. பெரிய அளவில் கல்வி ஏதும் கற்றுத்தரப்படவில்லை. இன்றைக்கு அவர்களுக்கு சிறப்புப் பள்ளிகள் வந்திருக்கின்றன. அவர்கள் பல்வேறு பணிகளுக்கும் வந்திருக்கிறார்கள். ஆனாலும் இன்னும் நிறைய மாறுதல்கள் வரவேண்டும்” என்கிறார் பார்வைத் திறன் சவாலுடையவரும் பார்வையற்றோருக்கான நல அமைப்பின் நிறுவனருமான ஜி.ஜெயராமன்.

மாற்றி யோசிக்கலாம் மாற்றுத் திறனாளிகளுக்கான முதல் தேவை கல்வி. அதிலும் செவித்திறன், வாய்பேசும் திறன், பார்வைத் திறனற்ற குழந்தைகள் பொதுவான பள்ளியில் பயில்வதில் பல சிரமங்கள் இருக்கின்றன. இப் பள்ளிகள் மாற்றுத் திறன்கொண்ட மாணவர்களின் நலனையும் கருத்தில் வைத்து வடிவமைக்கப் பட்டிருக்கவில்லை. பெரும்பாலான பள்ளிகளில் கழிவறை வசதியே இல்லாத நிலையில்,வெஸ்டர்ன் டாய்லெட்டுகள் இருக்கிறதா, ரேம்ப் இருக்கிறதா என்ற கேள்வி சற்று அதிகமாகப்படுகிறது. அரசு அலுவலகங்கள், பொதுக் கட்டடங்கள் மாற்றுத்திறன் கொண்டோரையும் கவனத்தில் கொண்டு கட்டப்படவேண்டும் என்ற சிந்தனையே சமீபமாகத்தான் வந்திருக்கிறது.
இந்த ஆண்டு நடைபெற்ற  பி.இ., படிப்புக்கான கல்லூரியைத் தேர்வுசெய்வதற்கான கலந்தாய்வில் 61 மாற்றுத் திறனாளிகள் கலந்துகொள்ள வில்லை. அவர்களுக்கு பொருளாதாரரீதியாகவோ அல்லது வேறெந்தச் சிரமமோ இருந்திருக்கலாம். மொத்தம் உள்ள 368 பேரில் 61 பேர் கலந்தாய்வுக்கே வரவில்லையெனில், இந்த 307 பேரில் முழுமையாகப் படிப்பை முடிக்கப் போகிறவர்கள் எத்தனை பேர்? அவர்களில் வேலை வாய்ப்பைப் பெறப் போகிறவர்கள் எத்தனை பேர்? தவிரவும் நாம் எத்தனை பேசினாலும் மாற்றுத் திறனாளிகளை வேலைக்கு எடுத்துக்கொள்வதில் சமூகத்தில் இன்னும் தயக்கமான மனநிலை நிலவுகிறது என்பதே உண்மை.
இதுபற்றி தசஇயிடம் கூறும்போது, “மாற்றுத் திறனாளிகள் முழுமையாகத் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பை சரியாக, முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ஏனெனில் அந்த வாய்ப்பு குறிப்பிட்ட ஒருவரது எதிர்காலம் சார்ந்தது மட்டுமல்ல. அவர் சரியாகச் செயல்படத் தவறும்பட்சத்தில் மாற்றுத் திறனாளிகள் குறிப்பிட்ட வேலை யைச் செய்யத் தகுதியற்றவர்கள் என்ற முத்திரை விழுந்துவிடும்’’ என்கிறார் ஜி.ஜெயராமன்.
“மாற்றுத் திறனாளிகள் திருமணம் செய்வது குறித்து ஒரு தயக்கமான மனநிலையே சமூகத்தில் நிலவிவந்தது. இன்று ஓரளவு நிலை மாறியிருக்கிறது. தங்களது குறைபாடு காரணமாக ஏற்படும் தாழ்வு மனப்பான்மை காரணமாக அவர்கள் திருமணம் பற்றி யோசிக்கத் தயங்குகிறார்கள். ஆனால் இவர்களுக்கு திருமணம் அவசியம். இத்தகையவர்களுக்கு குடும்பத்தினரோ, தன்னார்வ அமைப்புகளோ ஊக்கம் தந்து திருமண வாழ்க்கைக்கு வழிசெய்ய வேண்டும். அதேபோல் மாற்றுத் திறனாளி மற்றொரு மாற்றுத் திறனாளியைத்தான் திருமணம் செய்யவேண்டும் என்று இல்லை. அதற்கு என் வாழ்க்கையே உதாரணம்” என்கிறார் வழக்கறிஞரும் அட்சயா என்னும் மாற்றுத் திறனாளிகளுக்கான தன்னார்வ அமைப்பின் நிறுவனருமான கதிரேசன்.

“மக்கள் எங்களை இயல்பாகப் பார்ப்பதே இல்லை. மாற்றுத் திறனாளிகளைப் பார்த்துப் பரிதாபப்படுகிறார்கள் அல்லது அவர்களுக்கு இருக்கும் நலத்திட்டங்களைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள். இரண்டுமே சரியான போக்கு அல்ல. எங்களை இயல்பான மனிதராகப் பாருங்கள். எங்களுடைய உரிமைகளை அடைய இடையூறாக இருக்காதீர்கள். அதுவே எங்களுக்குச் செய்யும் மகத்தான உதவி” என்பதே பல்வேறு மாற்றுத் திறனாளிகளின் குரலாக இருக்கிறது. அனைவரின் செவியையும் இந்தச் சேதி எட்டும் என்று நம்புவோம். இன்று தினமும் ஊடகங்களில் சாதனை செய்த மாற்றுத் திறனாளி கள் குறித்த செய்திகள் வெளி யாகிக் கொண்டிருக்கின்றன.  அடுத்த பக்கங்களில் சில நம்பிக் கைக் குரல்களைப் படிக்கலாம்.

மாற்றுத் திறனாளிகள் முன்னேற  என்ன செய்யவேண்டும்?
சில யோசனைகள்

நகரப் பேருந்துகளில் பார்வையற்றோருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. ஆனால் அதைப் பெறுவதில் உள்ள சிரமங்கள் களையப்படவேண்டும்.
அவர்களுக்கான சிறப்புப் பள்ளிகள் சரிவர மேற்பார்வை செய்யப்படவேண்டும். அதை ஆய்வு செய்வதற்கு சிறப்புப் பள்ளிகள் பற்றிய முழு அறிவு பெற்ற, தகுந்த அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். அவரும் மாற்றுத் திறனாளியாக இருக்கவேண்டும். இவர்களில் அதுவும் பார்வையற்றோர் பலர் பன்னிரண்டாம் வகுப்போடு படிப்பை முடித்துக்கொள்கின்றனர். எனவே அவர்களுக்கு ஆறாம் வகுப்பிலிருந்தே சிறப்புத் திறன்களில் பயிற்சியளித்து வரவேண்டும். அது அவர்களது வேலைவாய்ப்புக்கு உதவும்.
சிறப்புக் குழு ஒன்றை அமைத்து பார்வைத் திறன் சவாலுடையவர்களுக்கு 1 சதவிகித இடஒதுக்கீட்டின் படி பணியளிக்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவேண்டும். இல்லையெனில் அந்த வேலை வாய்ப்புகள் பார்வைத் திறன் சவாலுடையவருக்குக் கிடைக்க வழிசெய்ய வேண்டும்.
மாவட்டந்தோறும் பல்திறன் பயிற்சி மையம் அமைத்து மாற்றுத் திறனாளிகளுக்கான பயிற்சிகள், ஆலோசனைகள், உதவிகள் வழங்கவேண்டும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு  திருமண உதவித்தொகை வழங்குகிறது. ஆனால் ஒரு மாவட்டத்தில் 5 பேருக்குத்தான் இது வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 5 பேர்தான் திருமணம் செய்யவேண்டுமா? இதனை அரசு கவனத்தில்கொள்ள வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளின் மனித வளம் பயன்படுத்தப்பட வேண்டும்.

கே.எம். பிரபு
முதல் முதல்வர்

கே.எம்.பிரபு, ஈரோடு மாவட்டம் கேசரிமங்கலத்தைச் சேர்ந்தவர்.  வேலைக்காக சென்னையில் குடியேறியவர். இன்று திருப்பூர் சிக்கண்ண அரசு கலைக் கல்லூரியின் முதல்வராக இருக்கும் பிரபு, தமிழகத்தின் பார்வைத்திறன் சவாலுடைய முதல் கல்லூரி முதல்வர். இவருடைய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் சக பேராசிரியர்களின்  உதவியோடு, நவீன தொழில்நுட்பத்தையும் தன் பணியைத் திறம்பட ஆற்றுவதில் பயன்படுத்திக் கொள்கிறார். இதற்கெனவே தன் செல்போனில் 3ஜி வசதியை வைத்திருக்கிறார்.  இவர் பிறவியிலேயே பார்வைத் திறன் இழந்தவரல்ல. தன் பள்ளிப் பருவத்தில் 1968 இல் பத்தாம் வகுப்பு படிக்கும்போதுதான் பார்வையில் பிரச்னை வந்தது. பியூசி படிக்கும்போது பார்வை முற்றிலுமாகப் போய்விட்டது. ஆனாலும் அது அவரின் தன்னம்பிக்கையைப் பாதிக்க வில்லை.  சென்னை கிறித்துவக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தார். அதில் தங்கப்பதக்கம் வாங்கியதோடு முனைவர் பட்டமும் பெற்றார்.
முதலில் நந்தனம் கலைக் கல்லூரியில் இணைப் பேராசிரியராக இருந்தார். 2007 இல் அரியானாவுக்குப் பணிமாற்றம் வந்தது.  அங்கே பி.பி.எஸ். மகளிர் பல்கலைக்கழகத்தில் தனது ஆர்வத்தின் காரணமாக ஆறு மொழி ஆய்வகங்களை உருவாக்கிக் காட்டினார். இந்த மொழி ஆய்வகம் மூலம் ஆறு மாதத்தில் 3400 மாணவிகளுக்கு ஆங்கிலம் கற்றுத் தந்து சாதனை புரிந்திருக்கிறார். பின்னர் மீண்டும் சென்னை மாநிலக் கல்லூரியில் ஆங்கில  துறைத் தலைவராகவும் இருந்தார்.
“மாற்றுத் திறனாளிகளுக்கும் சமவாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் தமிழக அரசு என் பணிமூப்பை கருத்தில்கொண்டு முதல்வராக பணி நியமனம் செய்துள்ளது’  என  நன்றி சொல்லும் அவர், மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களது சொந்த ஊரிலேயே பணி நியமனம் செய்தால் இன்னும் சிறப்பாகப் பணியாற்ற வசதியாயிருக்கும் என்கிறார்.

இளங்கோ
ஆங்கில ஆசிரியர்

மகிழ்; மகிழ்வி இதுதான் தனது லட்சியம் என்னும் இளங்கோ மூன்று துறையில் நிபுணர். வாழ்க்கைத் திறன் பயிற்சி, விளம்பரங்களுக்காகக் குரல் கொடுத்தல், ஏஜ் பனேசியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்பவையே அந்த மூன்று துறைகள். மேலும் விளம்பரங்களுக்காகக் குரல் கொடுக்கும் பார்வைத் திறன் சவாலுடைய முதல் நபரும்கூட. பார்வையற்றோருக்கான  பள்ளியில் படிக்கும்போது இவரது ஒரே சிரமம் புத்தகங்களின் பற்றாக்குறைதான்.
‘‘ஏழு மாணவர்களுக்கு ஒரு செட் புத்தகம்தான் இருக்கும். அத்தனை பேரும் அந்த ஒரு செட் புத்தகத்தைத்தான் படிக்கவேண்டும்’’ என்கிறார். லயோலாவில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்த இவர் ஆங்கில முதுகலைப் படிப்பையும், எம்.பில் படிப்பையும் அங்கே நிறைவு செய்தார். போனிடிக்ஸ் எனப்படும் ஒலி உச்சரிப்பு பாடப்பிரிவில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவரும்கூட. லயோலா கல்லூரியில், கலாச்சார நிகழ்வு, பாட்டு மற்றும் பேச்சுப்போட்டிகளில் கலந்துகொண்டது பிற்காலத்தில் அவரது துறையில் சிறந்து விளங்கத் துணைபுரிந்ததாகக் கூறுகிறார். பள்ளிகளில் ஆசிரியராகவும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகவும் பணியாற்றியபோது, வாழ்க்கைத் திறன்களில் பயிற்சியளித்தால் என்ன என்று அவருக்குத் தோன்றியது. ‘‘ஆங்கிலம் சரளமாகப் பேசவும், நல்ல தொடர்புகொள்ளும் திறனை வளர்த்துக்கொள்ளவும் பயிற்சியளிக் கும் நபர்களே நல்ல ஆங்கிலத் திறன் இல்லாதவர் களாகவும் தக வல் தொடர்பில் பின்தங்கி இருப்பதையும் கண்டு இந்தத் துறையில் என்னால் சிறப்பாக வெற்றிபெற முடியும்’’ என்று  நினைத்தேன். அவரது யூகம் பொய்க்கவில்லை. இன்றைக்கு ஆண்டுக்கு 15,000 இளைஞர்களுக்கு அவர் ஆங்கிலம் மற்றும் தொடர்பு கொள்ளுந்திறனில் பயிற்சியளிக்கிறார். இவரது ஏஸ் பனேசியா நிறுவனம் 300 பயிற்சி யாளர்களைக் கொண்டிருக்கிறது.
ஆக, பார்வைத் திறன் சவாலுடைய ஒரு தொழில் முனைவோராகவும் இளங்கோ திகழ்கிறார். “நூற்றுப் பத்து சதவிகிதம் உழைப்பைக் கொடுங்கள் அந்தக் கூடுதல் பத்து சதவிகிதம்தான் உங்களை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக்காட்டும்” என்கிறார் இளங்கோ.

அபிநயா
பேசும் விழிகள்

சமயங்களில் காலம் நமக்கெதிரே அமர்ந்து சதுரங்கம் ஆடும். செக் வைக்கும். அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் நமது தன்னம்பிக்கை வெளிப்படும். ஹேமலதா & தியானானந்த் தம்பதி யினரின் குழந்தை பிறவியிலேயே செவி மற்றும் வாய் பேசும்திறன் பாதிக்கப்பட்டபோது அவர்கள் எதிர்கொண்டது இத்தகைய சூழலைத்தான். ஆனால் அப்போது அவர்கள் நம்பிக்கையுடன் செயல்பட்டார்கள். அந்த நம்பிக்கைதான் அபிநயாவை இத்தனை தூரம் கொண்டுவந்திருக் கிறது. நாடோடிகள் படத்தில் சசிகுமாரின் தங்கையாக வந்து கவனத்தைக் கவர்ந்தவர் இவர். இதன் கன்னட பதிப்பிலும் அதே வேடத்தில் நடித்துள்ளார்.
முதல் சில ஆண்டுகள் செவித்திறன் சவாலுடையவர் களுக்கான சிறப்புப் பள்ளியில் படித்த அபிநயா, தன் பன்னிரண்டு வயதில் ஓர் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். மருத்துவர் மோகன் காமேஸ்வரன் அதை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்.  அபிநயாவை  சப்தங்களின் உலகுக்குக் கொண்டுவந்தது இந்த சிகிச்சைதான். ஆனாலும் தன் பெயரைச் சொல்லிக் கூப்பிடுகி றார்கள் என்பதைக் கண்டுகொள்ள மூன்று மாதங்கள் ஆனது. அனைத்துச் சப்தங்களையும் அடையாளம் கண்டுகொள்ள ஓராண்டுப் பயிற்சி தேவைப்பட்டது. சப்தங்களைத் தெரிந்துகொண்ட பிறகு ஆங்கில ஆசிரியர் ஒருவர் மூலம் ஆங்கிலம் கற்றுத் தரப்பட்டது. நான்காம் வகுப்புக்குமேல் பொதுப்பள்ளிக்கு மாறினார் அபிநயா. அபிநயாவின் தந்தை ஆனந்த் நடிகரும்கூட. பல தெலுங்குப் படங்களில் நடித்திருக்கிறார். சமயங்களில் தந்தையுடன் ஷூட்டிங்கும் செல்வார் அபிநயா. அப்போது ஷாட் முடிந்ததும் ஆர்வத்துடன் அதே காட்சியை தந்தைக்கு நடித்துக் காண்பிப்பார்.  ஆயுர்வேதிக் சோப் விளம்பரம் ஒன்றில் நடிக்கவைத்து உலகுக்கு அபிநயாவின் முகத்தை அறிமுகம் செய்துவைத்தவர் விளம்பரப் பட இயக்குநர் ஸ்லீபாதான்.  இயக்குநர் சமுத்திரக்கனி, ஸ்லீபாவிடமிருந்த அபிநயாவின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, நாடோடிகள் படத்தில் அவருக்கு வாய்ப்பளித்தார்.
சைகை மொழி மட்டுமின்றி, ஆங்கிலத்தின் வழியாகவும் அபிநயாவுடன் தொடர்பு கொள்ளலாம். கேள்விகளை ஆங்கிலத்தில் தந்தால் பதிலை தனது மடிக்கணினியில் டைப் செய்து காட்டுவார். திரையுலகில் நிறைய சாதிக்கவேண்டும்  என்பது தான் அவரின் இப்போதைய லட்சியமாம்.

எஸ்.ஏ.பி.ஜின்னா
விழிச்சவால்

பார்வையற்றவர்களுக்காக பார்வையற்றவர்களாலேயே ஒரு இதழ் சாத்தியமென நினைக்கிறீர்களா? சாதித்துக் காட்டியிருக்கிறார் இந்தியன் அஸோஸியேஷன் ஃபார் பிளைண்ட் அமைப்பின் நிறுவனர் எஸ்.ஏ.பி.ஜின்னா. இவரது விழிச்சவால் பத்திரிகையில், ஆசிரியரைத் தவிர மற்ற அனைவரும் பார்வைத்திறன் சவாலுடையவர்கள். அதுமட்டுமின்றி தமிழின் முதல் ப்ரெய்லி பத்திரிகை என்ற பெருமையும் விழிச்சவாலுக்கு உண்டு.
ஜின்னா பிறந்தது ஏர்வாடியில். 15 நபர்கள் கொண்ட குடும்பத்தில் வறுமையும் நிரந்தரமாகத் தங்கியிருந்தது. போதாக்குறைக்கு துரதிருஷ்டமும் துணைக்கு வந்தது விபத்து வடிவில். 13 வயதில் ஏற்பட்ட ஒரு விபத்தில் அவரின் விழி நரம்புகள் பாதிப்படைந்து, கண் பார்வை படிப்படியாகப் பறிபோய்விட்டது. அந்த விபத்துக்கு முன் அவர் ஏழாம் வகுப்பு முடித்திருந்தார். பார்வையைச் சரிசெய்ய முயன்ற குடும்பத்தினரின் முயற்சி தோல்வியில் முடிந்தது. ஒரே மாதத்தில் ப்ரெய்லியைக் கற்று எட்டாம் வகுப்பில் சேர்ந்தார். மதுரை அமெரிக்கன் கல்வியில் படித்துப் பட்டம் பெற்ற முதல் பார்வைத் திறன் சவாலுடையவர் என்பதோடு, பல்கலைக் கழகத்திலேயே முதலாவதாக வந்து தங்கப் பதக்கமும் வென்றார் ஜின்னா. “பார்வையற்றவர்கள் அவர்கள் அறிவுத் திறனை வளர்க்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இதழே விழிச்சவால்” என்கிறார் ஜின்னா. ஏற்கெனவே ப்ரெய்ல் பதிப்பாக திருக்குறள், நன்னூல், அப்துல் கலாமின் அக்னிச் சிறகுகள், க்ரியா ப்ரெய்ல் அகராதி போன்றவற்றை இவர் வெளியிட்டுள்ளார்.

Leave a comment

Share Your Thoughts...