‘மாற்றுத் திறனாளிகள்’ என்று ஒதுக்கப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் கை கொடுக்கிறது வேலூர் காந்தி நகர் தொழிற்பேட்டை. ”வேலூர் ரவுண்ட்ஸ் டேபிள் 23 அமைப்பின் சார்பாக கடந்த 35 ஆண்டுகளாக மகளிர் மாற்றுத் திறனாளிகளுக்கானத் தொழிற்பேட்டை நடந்து வருகிறது!”
காலை 8 மணி. 22 வயது முதல் 55 வயது வரையிலான மாற்றுத் திறனாளி மகளிர்கள் அன்றையை வேலையைத் தொடங்கும் உற்சாகப் புன்னகையுடன் வருகைபுரிந்தனர்.
”தங்களது இயலாமையை நினைத்து வாழ்க்கையில் சோர்ந்து விடுபவர்கள்தான் அதிகம். ஆனால், மனதில் தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் உற்சாகமாக இவர்கள் உழைப்பதால்தான் 35 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றி நடைபோடுகிறது எங்கள் நிறுவனம். எங்கள் நோக்கமே இயலாதவர்களுக்கு இயன்றவரை வாய்ப்புகளை வழங்குவதுதான். இங்கு வேலை செய்யும் பெண் களில் 70 சதவிகிதம் பேர் மாற்றுத் திறனாளிகள், 30 சதவிகிதம் பேர் கணவனை இழந்தவர்கள் அல்லது கணவன் மற்றும் பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள்.
வாரம் ஒரு முறை இவர்களுக்கு இங்கேயே மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மற்ற தொழிற்பேட்டைகளைப் போலவே இ.எஸ்.ஐ., பி.எஃப். போன்றவையும் இங்கு வழங்கப்படுகிறது. எங்கள் மகளிர் குழு கடின உழைப்பாளிகளைக்கொண்டது!” என்கிறார் உற்சாகமும் உணர்ச்சியும் பொங்க.
”இங்க 27 வருஷங்களா வேலை பார்க்கிறேன். ஆண்டவன் யாரையும் குறைவெச்சு படைக்கிறது இல்லை. மனசில் குறை இருந்தா அது மனுஷங்க குறை. நாங்க தயாரித்து அனுப்புற பொருள்ல குறை இருந்ததா, இது வரை ஒரு பொருள் கூட திரும்பி வந்ததே இல்லை!” என்கிறார் விஜயா பெருமை பொங்க.
”அரசம்பட்டுல இருந்து வர்றேன். ஒருநாளைக்கு 500 பொருட்கள் வரை உற்பத்தி செய்து அனுப்ப றோம். இங்க வேலை பார்க்கிறது எங்களுக்கு ரொம்ப மன நிறைவா இருக்குங்க. வாழ்க்கையில் எல்லோருக்கும் சந்தோஷமான வேலை அமையாது. ஆனா, நாங்க இங்கே மனசு முழுக்க சந்தோஷத்தோட வர்றோம். போகும் போதுதான் கொஞ்சம் வருத்தமா இருக்கும், ‘இன்னும் கொஞ்ச நேரம் வேலை பார்த்து இருக்கலாமே’ன்னு!” என்று புன்னகைக்கிறார் மாதவி.
நம்பிக்கையை வார்த்தையாக மட்டுமல்லாது வாழ்க்கையாகவும் தரிசித்த திருப்தி நமக்கு!
Soruce : http://www.vikatan.com/article.php?mid=1&sid=167&aid=5964