மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அரசு வேலைவாய்ப்பில் 4%, இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதிசெய்தல் உயர்மட்டக் குழு அமைத்து அரசாணை (நிலை) எண். 13, 7.06.2022 தமிழ்நாடு அரசால் அரசாணை வெளியிடப்பட்டது

ஆணை :
அரசாணை (நிலை) எண்.01, மாற்றுத் திறனாளிகள் நல (மா.தி.ந.3.2)த்துறை, நாள் 02.01.2012-ன்படி மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3% இட ஒதுக்கீடு வழங்குவதை கண்காணிக்க தலைமைச் செயலரின் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.
அரசாணை (நிலை) எண். 102, மாற்றுத்திறனாளிகள் நலத் (மா.தி.ந.3) துறை, நாள். 11.12.2013-ன்படி மேற்படி தலைமைச் செயலரின் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவில் மேலும் மூன்று உறுப்பினர்களை சேர்த்து ஆணையிடப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம், 2016-ன்படி மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016-இன் சட்டப்பிரிவு 34-இல், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4% சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்படவேண்டுமெனகூறப்பட்டுள்ளது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 2022-2023-ஆம் நிதியாண்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஏனையவற்றுடன் கீழ்க்கண்ட அறிவிப்பினையும் வெளியிட்டுள்ளார்:-
மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம், 2016-இல் வலியுறுத்தப்பட்டுள்ள அரசு வேலைவாய்ப்பில் 4 சதவிகிதம் இட ஒதுக்கீட்டினை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க ஏதுவாக உகந்த பதவியிடங்கள் கண்டறியப்பட்டு பணிநியமனம் செய்வதை கண்காணிக்கும் பொருட்டு உயர்மட்டக் குழு அமைக்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரின் கடித ந.க.எண்.3064/ பணியமர்த்தல்/2021, நாள் 22.04.2022-ன்படி மாற்றுத் திறனாளிகளுக்கான மாநிலஆணையர் / மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரின் கடிதத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் நடைமுறையில் உள்ள ஒதுக்கீட்டின் அடிப்படையிலும், வேலைவாய்ப்பு வழங்குவதை உறுதி செய்திடும் வகையிலும் ஏற்கனவே அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவை மறு சீரமைப்பு செய்து ஒரு கண்காணிப்பு குழுவினை அமைக்குமாறு அரசினை கேட்டுக் கொண்டுள்ளார்
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் / மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரின் கருத்துருவினை கவனமாக பரிசீலித்த அரசு, வேலைவாய்ப்பில் 4% இடஒதுக்கீடு வழங்குவதை உறுதிசெய்யும் உறுதிசெய்யும் பொருட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் தலைமையில் பின்வரும் உறுப்பினர்களை கொண்டு உயர்மட்ட குழுவினை அமைத்து ஆணையிடுகிறது:-
- தலைவர்:
- அரசு செயலாளர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை.
- உறுப்பினர்கள்
- அரசு செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை
- அரசு செயலாளர், மனிதவள மேலாண்மைத்துறை
- மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர், செயலர் மற்றும் கூட்டுநர்
- செயலாளர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
- தலைவர், ஆசிரியர் தேர்வு வாரியம்
- தலைவர், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்
- இயக்குநர்,வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை
- கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்
அரசு வேலைவாய்ப்பில் 4%, இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதிசெய்ய அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவானது கீழ்க்காணும் பணிகளை மேற்கொள்ளும்:-
- அனைத்து அரசு துறைகள், அரசு சார்பு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் வழங்கப்படும் வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு அளிக்கப்படுவதை கண்காணிக்கும்.
- மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் மாற்றுத் திறனாளிகளைக் கொண்டு நிரப்பப்படாத பட்சத்தில், அப்பணியிடங்கள் அடுத்த ஆண்டிற்கு முறையாக முன்கொணரப்படுகின்றனவா (carried forward) என்பதனை கண்காணிக்கும்.
- மாற்றுத்திறனாளிகள் பணிபுரிய உகந்த பதவியிடங்கள் கண்டறியப்படுவதையும், மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மறுஆய்வு செய்யப்படுவதையும் கண்காணிக்கும்.
பதிவிறக்கம்(Download)
அரசாணை (நிலை) எண். 13, 7.06.2022