மாற்றுத் திறனாளிகளின் மகத்துவம்! - enabled.in

மாற்றுத் திறனாளிகளின் மகத்துவம்!

ஊனம்…

ஊனால் ஆகிய இந்த உடம்பு மதிப்பு மிக்க பல உறுப்புகளைப் பெற்றுள்ளது. இவற்றுள் ஏதேனும் ஒன்றிரண்டு குறைபாடுகள் பெற்றவர்களை ஊனமுற்றவர்கள் என்கின்றோம்.

ஒரு குழந்தை எந்த இடத்தில், எந்த வீட்டில், எந்த இனத்தில், எந்த மதத்தில் பிறப்பது என்பதை பிறக்கப்போகும் அந்தக் குழந்தை தீர்மானிப்பதில்லை. பிறப்பும், இறப்பும் யார் சொல்லியும் வருவதில்லை. எப்படியோ நிகழ்ந்து விடுகின்றன.

ஊனமும் அப்படித்தான். யாரும் விரும்பி ஊனமடைவதில்லை. பிறப்பாலோ, வியாதியாலோ, விபத்தாலோ எப்படியோ உடலில் ஊனம் ஏற்பட்டு விடுகின்றது.

பாரசீகக் கவிஞன் உமர் கயாம். பாரசீகம்தான் இன்றைய ஈரான் நாடு. ஒரு கூடாரம் தைப்பவனின் மகனாகப் பிறந்தவர் உமர். கவிதை, கணிதம், ஜோதிடம், வானவியல் என பல துறைகளில் மாற்றத்தை அறிந்து வெற்றி பெற்றவர். அதற்குக் காரணம், எதையும் ஈடுபாட்டுடன் செய்ததுதான். போதையின் மயக்கத்தில் எழுதிய அவரின் கவிதைகள் எல்லோரையும் மயங்கச் செய்தன.

‘பானை பேசுகிறது’ என்கிற தலைப்பில் ஊனமுற்றவர்களைப் பற்றி அவர் எழுதிய சிறிய கவிதை. எத்தனையோ பானைகளை குயவன் செய்கிறான். அவற்றுள் நல்லவற்றைத் தேடி வாங்கிச் செல்கின்றனர். சில பானைகளை வளைந்திருக்கிறது, நெளிந்திருக்கிறது, ஓட்டையாக இருக்கின்றது என்றெல்லாம் சொல்லி ஒதுக்கி வைத்துவிடுகின்றனர். அப்படி ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு பானை பேசுகிறது…

வளைந்தும்
நெளிந்தும்
உள்ளதென்று
விலகிப் போகின்றார்கள்
அந்த நாள்
குயவன் செய்த பிழைக்கு
நான் என்ன செய்வேன்?

என்று அந்தப் பானையின் ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பானையின் ஏக்கம் மட்டுமல்ல, ஊனமுற்றவர்களின் ஏக்கத்தையும் இந்தப் பானையின் வழியாக உமர் கயாம் பதிவு செய்துள்ளார். இது ஒரு கவிதைப் பார்வை.

அன்பானவர்களே! ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும் என்பார்கள். ஆம்! ஒவ்வொருவருக்குள்ளும் இன்னொரு மாற்றுத்திறன் இருக்கிறது. அதைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். தேடலில்தானே வாழ்க்கையின் வெற்றி அடங்கி இருக்கிறது. அந்த வெற்றிதான் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்துகின்றது.

ஆம்! ஊனம் என்ற சொல்லும் இன்று மாறி இருக்கிறது. மாற்றுத் திறனாளிகள் என்று அவர்களை மாற்றி இருக்கின்றது. அவர்கள் ஒருவிதத்தில் உடல் ஊனத்தால் வெளித்தோற்றத்தால் மாறுபட்டவர்களாக இருக்கலாம். ஆனால் மனதால், எண்ணங்களால் அவர்கள் உயர்ந்தவர்கள்தான். மற்றவர்களிடம் இல்லாத மனஉறுதி, வாழவேண்டும் என்கிற வைராக்கியத்தை அவர்களுக்கு அது தருகிறது. அந்த வைராக்கியம்தான் வலிகளைத் தாங்கி வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழிகளைத் தந்து சாதனையாளர்களாய் சாதிக்க வைக்கின்றது.

‘என் கதை’ என்கிற புத்தகம் என் கைகளில் இப்போது புரள்கிறது. புரட்டுகிறேன். பக்கங்களைப் புரட்டுகிறேன். ஒரு குழந்தை, ஒரு வருடம், ஏழு மாதங்களே கடந்த ஒரு குழந்தை. எதிர்பாராத ஒரு நோயின் தாக்குதலில், பேசுகிற, பார்க்கிற, கேட்கிற சக்தியை பறிகொடுத்து விட்ட சின்னஞ்சிறிய பசுந்தளிரின் கதை.

எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் போராடிப் போராடி ஒரு புத்தம் புது உலகத்தை வசப்படுத்திக் கொண்ட அற்புதக் கதை. கொடிய நோய் பறித்துக் கொண்ட பேச்சுத்திறனை, எழுத்துத்திறனை, பகீரத முயற்சியால் மீட்டுக்கொண்ட ஒரு குழந்தையின் போராட்டக் கதைதான் ‘என் கதை’. அதிசயமே அதிசயத்துப் போகும் அசாத்திய சாதனைக்குரிய அந்தக் குழந்தைதான் ஹெலன் கெல்லர். தன்னம்பிக்கை, விடாமுயற்சி, துணிச்சல், ஆர்வம், அன்பு, பரிவு, பாசம், தேடல் இதன் மறு பெயர்தான் ஹெலன்கெல்லர். தன் ஊனத்தை மலைபோன்ற மன உறுதியால் வெற்றி கண்டவர்.

‘அசைக்கமுடியாத உறுதியும் திடசித்தமும் கொண்டவன் உலகத்தைத் தன் வழியில் தானே உருவாக்கிக் கொள்வான்’ என்பார் தத்துவமேதை கதே. இந்தச் சிந்தனைக்குச் சிகரம் வைத்தாற்போல் வாழ்ந்து சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகள் எத்தனையோ பேருண்டு. இதோ ஒருவர்-

63 வயது நிரம்பிய ஸ்டீபன் ஹாக்கிங். 2005 ஆம் ஆண்டு வீல் சேரில் அமர்ந்தபடி தொலைக்காட்சி நிலையத்திற்கு செவிலியர்கள் அவரை அழைத்து வருகிறார்கள்.

கை, கால், வயிறு, தலை என உடலின் எந்தப் பாகமும் செயல்படாத நிலை. நம்பிக்கை இழக்காமல் வலக்கண்ணை மட்டுமே அசைத்து எழுத்துகளை அடையாளம் காட்டி பாடம் நடத்தி, புத்தகம் எழுதி புகழின் உச்சிக்கு உயர்ந்தவர். தன்னம்பிக்கைப் பயிற்சியாளர். தொலைக்காட்

சியில் கேட்ட கேள்விகளுக்கு கணினி மூலம் விடை சொல்லுகிறார்.

வாழ்க்கை எப்படி இருக்கிறது என்ற ஒரு கேள்வியைக் கேட்கிறார் தொகுப்பாளர். முன்பைவிட சந்தோஷமாகவும், சவால் நிறைந்ததாகவும் இருக்கிறது என்கிறார் ஹாக்கிங்.

“இந்த உடல் நிலையில் உங்களால் சந்தோஷமாக இருக்க முடிகிறதா?” என்று தயங்கித் தயங்கிக் கேட்கிறார், தொகுப்பாளர்.

“எதை இழந்தீர்கள் என்பதல்ல, என்ன மிச்சம் இருக்கிறது என்பதுதான் முக்கியம்” என்றார் ஸ்டீபன் ஹாக்கிங்.

அன்பானவர்களே! இதுதான் வாழத் தெரிந்தவர்களின் வழி. பூரான் தனக்கு எத்தனை கால்கள் என்று எண்ணத் தொடங்கினால் அது நகராமலேயே நின்று விடும். இழந்ததை மறந்து விடுங்கள். தன்னிரக்கத்தைத் தூக்கி எறியுங்கள். ஒவ்வொரு வருக்குள்ளும் தனித்திறமைகள் இருக்கின்றன. மாற்றுத்திறமைகளும் இருக்கின்றன. அந்தத்திறமைகளைக் கண்டு பட்டை தீட்டுங்கள். தடைகளையும், தோல்விகளையும் கண்டு பயந்து விடாதீர்கள். சிறகுகளை விரியுங்கள். பரந்து கிடக்கிறது பூமி. விரிந்து கிடக்கிறது வானம். வாழ்க்கை வசப்படும்!
பேராசிரியர் க. ராமச்சந்திரன்

Join the Conversation

1 Comment

Share Your Thoughts...

%d bloggers like this: