மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறும் தம்பதியினருக்கு திருமண நிதி உதவித் தொகை மற்றும் மணப் பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் மாற்று திறனாளிகளுக்கு நான்கு வகையான திட்டங்களின் கீழ் திருமண நிதியுதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மேற்கண்ட திட்டங்களின் கீழ் பயன்பெறும் மாற்றுத்திறனாளிகள் சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திருமண உதவி திட்டங்களால் பயன் அடைவது போன்றே பயன்பெற, முதலமைச்சர் ஜெயலலிதா, ரூ.25 ஆயிரம் நிதியுதவியோடு தாலிக்கு 4 கிராம் தங்கம் பெறவும், இளம் பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித்தொகையை ரூ.50 ஆயிரமாக உயர்த்தியும், 4 கிராம் இலவச தங்கம் தாலிக்காக வழங்கவும் கடந்த 15.6.2011 அன்று உத்தரவிட்டார்.
இந்த ஆணைக்கிணங்க மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் இன்று சென்னை மாவட்டத்தை சேர்ந்த அருள் நாகராஜ், பிரபாவதி தம்பதிக்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் 4 கிராம் தங்கத்தையும், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த முனியாண்டி, தமிழரசி தம்பதி, காஞ்சிபுரத்தை சேர்ந்த விஜயகுமார், கிருஷ்ணவேணி, திருவள்ளூரை சேர்ந்த லிவிங்ஸ்டன், நாகேஸ்வரி தம்பதி ஆகிய 3 தம்பதிகளுக்கு ரூ.25 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் 4 கிராம் தங்கத்தை வழங்கினார்.