என்ஜினீயரிங், மருத்துவம் மற்றும் பட்டமேற்படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேசிய அளவில் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான கல்வி உதவித் தொகை “இந்திய அரசின் தேசிய உடல் ஊனமுற்றோருக்கான நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தால்” 2011- 2012-ம் நிதியாண்டில் தகுதியுள்ள 1000 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இதற்காக, தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள மாநில தலைமை கூட்டுறவு வங்கி வழிநடத்தும் அமைப்பாக செயல்படுகிறது. பொறியியல், மருத்துவம் மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தகுதியுள்ள மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகையை பெற விண்ணப்பிக்கலாம்.
மருத்துவம் மற்றும் பொறியியல் பட்டப் படிப்புக்கு மாதம் ஒன்றுக்கு பராமரிப்பு உதவித் தொகை ரூ. 2 ஆயிரத்து 500ம், புத்தகம் மற்றும் இதர கல்வி உபகரணங்கள் வாங்குவதற்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
முதுகலை மருத்துவம், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பட்ட மேற்படிப்புக்கு மாதம் ஒன்றுக்கு பராமரிப்பு உதவித் தொகை ரூ. 3 ஆயிரமும், புத்தகங்கள் மற்றும் இதர கல்வி உபகரணங்கள் வாங்குவதற்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
கூடுதல் விபரங்களுக்கு www.nhfdc.nic.in என்ற இணைய தள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.