1. மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லங்கள் தற்போது அரசின் நிதியுதவியுடன், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் திருவள்ளூர், கடலூர், திருவாரூர், தூத்துக்குடி, இராமநாதபுரம், கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, சேலம், வேலூர் மற்றும் மதுரை ஆகிய 11 மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன.
மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறைவிடம், உணவு, மருத்துவம் மற்றும் மறுவாழ்வு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு இல்லத்திற்கும் 9 லட்சத்து 14 ஆயிரத்து 800 ரூபாய் வீதம், மொத்தம் 1 கோடியே 62 ஆயிரத்து 800 ரூபாயினை 11 இல்லங்களுக்கும் ஆண்டுதோறும் அரசு மானியமாக வழங்கி வருகிறது. தற்போது மன நல காப்பகம் இல்லாத மாவட்டங்களிலிருந்து மீட்க ப்படும்,
மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், வேறு மாவட்டத்தில் இயங்கும் மன நல காப்பகம் அல்லது மன நல மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள். எனவே, இதனை தவிர்த்து அந்தந்த மாவட்டங்களிலிருந்து மீட்கப்படும் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், அம்மாவட்டங்களி லேயே பயனடையும் வண்ணம் மீதமுள்ள 21 மாவட்டங்களில் மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் அமைக்கப்ப
டும். இதற்கென அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 1 கோடியே 92 லட்சத்து 10 ஆயிரத்து 800 ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.
2. தமிழ்நாட்டில் 14 வயதிற்கு மேற்பட்ட மன வளர்ச்சி குன்றியோருக்கான தங்கும் வசதி, உணவு மற்றும் தொழிற் பயிற்சியுடன் கூடிய 31 இல்லங்கள் 21 மாவட்டங்களில் அரசின் நிதியுதவியுடன் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த இல்லங்கள் மூலம் பெறப்படும் பராமரிப்பு மற்றும் பயிற்சிகள் பயனாளிகளின் பெற்றோர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் மிகப் பெரிய
பயனாக உள்ளன. எனவே, இந்த இல்லங்களை மேலும் 11 மாவட்டங்களில் தருமபுரி, கரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் ஆகிய ஆறு மாவட்டங்களில், ஆண்களுக்கான ஆறு இல்லங்களையும், விருதுநகர், அரியலூர், திருப்பூர், நீலகிரி மற்றும் விழுப்புரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் பெண்களுக்கான ஐந்து இல்லங்களையும் திறக்க அரசு முடிவெடுத்து உள்ளது.
இதனால், அரசுக்கு ஒரு இல்லத்திற்கு, ஆண்டுக்கு, 9 லட்சத்து 66 ஆயிரத்து 800 ரூபாய் என்ற வீதத்தில் 11 இல்லங்களுக்கு 1 கோடியே 6 லட்சத்து 34 ஆயிரத்து 800 ரூபாய் செலவினம் ஏற்படும்.
3. மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ், 23 அரசு சிறப்புப் பள்ளிகளும், அரசு உதவி பெறும் சிறப்புப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில், விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஒரு நபருக்கு 650 ரூபாய் வீதம் உணவூட்டுச் செலவினம் வழங்கப்பட்டு வருகிறது. இச்சிறப்புப் பள்ளிகளில், தினசரி காலை வந்து மாலை வீடு திரும்பும் மாணவ, மாணவியருக்கு தற்போது மதிய உணவு வழங்கப்படுவதில்லை. எனவே, சத்துணவு திட்டம் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின், கட்டுப்பாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் சிறப்புப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கும் விரிவு படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம், உத்தேசமாக 1733 மாணவ, மாணவியர் பயன்பெறுவர். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 38 லட்சத்து 99 ஆயிரத்து 250 ரூபாய் தொடர் செலவினம் ஏற்படும்.
press release Date : Jul 25,2014.
ref : http://cms.tn.gov.in//sites/default/files/press_release/pr250714_tnla_12.pdf